Friday, June 10, 2011

பரதம் என்னும் பதம்

            பரதக்கலை பற்றிய ஆராய்ச்சிக்கு முதலில் பரதக்கலையில் செறிந்துள்ள ஆழமான கருத்தினை ஆராய்தல் பொருத்தமானதாகும். இத்தெய்வீகத் திருக்கலையினையே நாம் பல்வேறு நூல்கள், ஏடுகள், குறிப்புகள் என்பவற்றில் பரதம் என குறிப்பிட்டுள்ளதைக் காணக்கூடியதாகவுள்ளது. எனவே 'பரதம்' என்னும் பதம் எவ்வடிப்படை மூலங்களைக் கொண்டு பின்னிப் பிணைந்துள்ளது என்பதனை அறிதல் பொருத்தமானதாகும். பரதக்கலையின் முக்கண்களாக திகழ்வன; பாவம், ராகம், தாளம் என்னும் கலைக்கூறுகளாகும். இம்மூன்று சொற்களிலும் முதல் எழுத்துக்களாக திகழ்வன ப,ர,த என்னும் எழுத்துக்களாகும். அதே மூன்று சொற்களிலும் இறுதி எழுத்தாக திகழ்வது "ம்" என்னும் எழுத்தாகும். இதுவே இறுதியும், பொதுவானதுமான எழுத்தாகும். எனவே மூன்று சொற்களின் முதல் எழுத்துக்களையும், அதே மூன்று சொற்களின் இறுதி எழுத்தாகிய "ம்" எனும் எழுத்தும் சேர்த்து 'பரதம்' என்னும் பதம் புனையப்பட்டுள்ளது. 

            பழந்தமிழர் வரலாற்றுக் குறிப்புகளில் தமிழ் மக்கள் இயல், இசை, நாடகம் ஆகிய கலைகளில் சிறப்பிடம் பெற்று விளங்கினர் என்பதற்கான பல ஆதாரங்களை கலைகளில் இன்றும் நாம் காண்கிறோம். பல்வேறு காலங்களாகப் போற்றி பேணி மெருகூட்டி வளர்க்கப்பட்டு வந்த தெய்வீகத் திருக்கலையான  நாட்டியக்கலையானது, பிற்காலத்தில் துரதிஷ்டவசமாக சமூக சீரழிவுகளுக்கு உட்படுத்தப்பட்டு, காலச்சக்கரத்தில் சிக்குண்டு, இழிவு நிலைக்கு தள்ளப்பட்டு, உதாசீனம் செய்யப்பட்டது, வருத்தத்துக்குரிய விடயமேயாகும். குறிப்பாக சென்ற நூற்றாண்டின் முற்பகுதியிலும், 19ம் நூற்றாண்டின் இறுதியிலும், இந்நாட்டியக்கலையின் மகத்துவத்தையும், தெய்வீக கலையம்சத்தையும் அறியாத மக்கள் அதனை உதாசீனம் செய்தனர். எனினும் இன்று எமது நாட்டியக்கலையின் ஆராய்ச்சியானது சில பல தவிர்க்கமுடியாத வெற்றிடங்கள், அடிப்படைச் சுலோகத்தின் மீது கொண்ட ஊகங்கள், முரண்பாடுகள் என்பவற்றுடன் காணப்படினும் அதன் தெய்வீகப்பலமும், தெய்வீக சக்தியும் இன்றுவரை அதனை நிலைகொள்ளச் செய்துவிட்டது.  
            இன்றைய நாட்டியக்கலை சம்பந்தமான ஆராய்ச்சிக்கு தமிழில் நமக்கு கிடைத்துள்ள அரிய பண்டைய நூல்கள் சிலப்பதிகாரமும், அடியார்க்கு நல்லாரின் சிலப்பதிகார உரையும் சிறப்பிடம் பெறுகின்றன. இது தவிர, நாட்டியத்தில் சில வடமொழி மொழிபெயர்ப்புகளும், சிறந்த சேவையாற்றி வருகின்றன. இவை பெரும்பாலும் வடமொழியிலுள்ள சுலோகங்களின் நேரடித் தமிழ் மொழிபெயர்ப்புக்கள் ஆகும். டாக்டர். உ. வே. சாமிநாத ஐயர் தமிழ் இலக்கியத்துறைக்கு மட்டுமன்றி தமிழ் கலையுலகத்திட்கும் சிறந்த தொண்டாற்றியுள்ளார். உதாரணமாக வடமொழியில் இயற்றப்பட்ட அபிநயத்தர்ப்பணம் நந்திகேஸ்வரரால் இயற்றப்பட்டது. இதன் தமிழ் மொழிபெயர்ப்பு வீரராகவையன் என்பவரால் மேற்கொள்ளப்பட்டதாக வரலாற்றுக் குறிப்பொன்று சாட்சி பகிர்கின்றது. டாக்டர். உ. வே. சாமிநாத ஐயரின்தொகுப்பில் இந்நூலின் காகிதச் சுவடி ஒன்று அடக்கப்பட்டிருந்தது என அறியப்படுகின்றது. 
           
               இன்றைய நாட்டியக்கலை ஆராய்ச்சிக்கு தென்னிந்திய கோயிற் சிற்பங்கள், அவற்றுக்கு கீழ் எழுதப்பட்ட சுலோகங்கள், கோயிற் கோபுரங்கள், கோயில்களில் வரையப்பட்டுள்ள ஓவியங்கள், சில கோவிற் கல்வெட்டுக்கள் என்பன அதி முக்கிய பங்கினை வகிக்கின்றன. மேலும் அடிப்படை உண்மைகளும், அதன் தெய்வீகக் கோட்பாடுகள் என்பனவும், குருகுலங்கள் மூலமாகவும், வாய்மொழி மூலமாகவும் பாதுகாக்கப்பட்டும், வளர்க்கப்பட்டும் வந்தன. 

2 comments: