Thursday, June 30, 2011

அடவு

            நடனத்தின் அடவு என்பது ஒரு சிறு ஆடல் துனுக்காகும். பல மண்டலங்களும், முத்திரைகளும் இணைந்து வருவது அடவு எனப்படும். இந்த ஆடல் துனுக்கானது ஒரு தாளத்தின் ஒரு காலடியையும், ஓர் உடல் நிலையையும், ஆடல் முத்திரைகள் கொண்ட கையசைவு ஒன்றையும் சேர்த்து பொருந்தியதாக இருக்கும். அதே போல ஓரிடத்தில் இருந்து இன்னோர் இடத்தை நடிகை ஆட்டத்தின் மூலம் அடைவதினால் , இதனை மொழி இலக்கணம் கற்ற சில அறிஞர்கள் இன்று அடைவு என்று திருத்தி எழுதி வருகின்றனர். இது "அடி" என்ற பொருள் கொண்ட ஆடு, அடுக்கு, அதுவு என்ற தெலுங்குச் சொற்களிலிருந்து வந்துள்ளது. 

            இவ்வாறு பல துணுக்குகள் கோர்வையைச் சேர்ந்தே ஒரு ஆடல் வரிசையாகும். பல ஆடல் வரிசையைக் கொண்டது குழு நடனமாகும். இந்த துணுக்குகளில் அடிகளைப் பயன்படுத்துவதில் பல வகைகள் காணப்படுகின்றன.அடிகளைத் தரை மீது சமமாய்த் தட்டுவது தட்டடவு  என்றும், கால நீட்டித் தட்டுவது நாட்டடவு என்றும், ஐந்து விரல் கொண்ட பதத்தின் முன் பகுதியை குதித்து மெட்டுவது மெட்டடைவு என்றும் அடிப்படையில் மூன்று வகைப்படும். இவைகளில் இரண்டு அடைவுகள் சேரும் போது தட்டுமெட்டு, மெட்டிநாட்டு, மெட்டித்தட்டு, நாட்டித்தட்டு, நாட்டிமெட்டுஎன ஆறு அடைவுப் பிரிவுகள் உண்டு. இதனைவிட மண்டியடவு, சறுக்கல் அடவு, கத்தரி அடவு, கிடதக தரிகிட தொம், ததின்கினதொம் முதலியனவும் அடங்கும். 

முத்திரைகள்

           முத்திரை என்பது பொருளைக் குறிப்பதற்காக விரல்களால் குறிக்கப்படும் அமைப்பு. அதாவது ஒரு பொருளில் தோற்றம், உருவம், குறி என்பவற்றைக் கைகளினால் விளக்குவதே முத்திரையாகும். இம்முத்திரைகளின் பயன்பாடு நடனத்தில் முக்கியமான இடத்தைப் பெறுகின்றது. இதனால் இம்முத்திரைகள் "ஹஸ்தாபிநயம்" என்று அழைக்கப்படுகின்றது. பாரத முனிவர் காலத்த்ற்கு முன்னாலேயே இக்கலை நன்கு வளர்ச்சியடைந்திருக்க வேண்டும். வார்த்தைகள் எதுவும் பேசாமலே கைகளிலுள்ள விரல்களின் பல்வேறு நிலைகளாலும், அசைவுகளாலும் பொருள்பட அபிநயிப்பது இக்கலையாகும். நடனத்தில் பிரயோகிக்கும் கைகளை சமஸ்கிருதத்தில் ஹஸ்தங்கள் என்று அழைப்பர். தமிழில் "முத்திரைகள்" என்று அழைக்கப்படும். இவ் ஹஸ்தங்களை இரண்டாகப் பாகுபாடு செய்யலாம். 
அவையாவன 
  1. அபிநய ஹஸ்தம்.
  2. நிருத்த ஹஸ்தம்.
இவ் அபிநய ஹஸ்தம் மேலும் இரண்டாகப் பாகுபாடு செய்யலாம்.
  1. ஒற்றைக்கை அல்லது அஸம்யுத ஹஸ்தம்.
  2. இரட்டைக்கை அல்லது ஸம்யுத ஹஸ்தம்.
           இவற்றை முறையே இணைந்த கை, இணையாத கை எனவும் கூறலாம். அபிநயக்கைகள் கருத்துக்களைப் புலப்படுத்தவும் நிருத்தக் கைகள் நிருத்தத்திற்கும் பயன்படும். பாரத சாஸ்திரம் ஹஸ்தங்கள் பற்றி கூறும் போது    
அஸம்யுத ஹஸ்தங்கள் இருபத்து எட்டு  எனவும்,  ஸம்யுத ஹஸ்தங்கள் இருபத்து நான்கு எனவும் கூறுகிறது. முத்திரைகளின் உபயோகமே விநியோகங்களாகும். 

Wednesday, June 29, 2011

நமஸ்காரம்

            பாரத தேசத்தில் தோற்றம் பெற்றதும், மிகவும் புனிதமானதுமான நாட்டியக்கலை என்று மக்கள் மனதில் தெய்வீக கலை என்ற அந்தஸ்தைப் பெற்றதோ அன்றே தட்டிக் கும்பிடும் வழக்கமும் ஆரம்பமாயிற்று. அதாவது தட்டிக்கும்பிடுதல் என்ற வழக்கம் மிகவும் பழைமை வாய்ந்ததாகும். இத்தட்டிக்கும்பிடும் செயல் நமஸ்காரம் எனவும் கூறப்படும். இந்நமஸ்காரம்   இரு வகைப்படும்.சின்ன நமஸ்காரம் , பெரிய நமஸ்காரம். பொதுவாக நாட்டியப் பயிற்சியின் பொது செய்யப்படும் நமஸ்காரம் சின்ன நமஸ்காரம் ஆகும். நாட்டியக் கச்சேரியின் பொது இவ்விரு நமஸ்காரமும் செய்யப்படும்.

           இந் நமஸ்காரத்தினை நடனமாடும் ஒருவர் நடனமாடுவதற்கு முன்னரும் நடனமாடிய பின்னரும் செய்தல் வேண்டும். நமஸ்காரத்தின் போது  பூமாதேவியை வழிபடுவதாகக் கூறப்படும். இந் நமஸ்காரத்தின் போது கடஹாமுகம், சிகரம், சதுரம் என்னும் ஒற்றைக்கை முத்திரைகள் மூன்றும், அஞ்சலி எனப்படும் இரட்டைக்கை முத்திரை ஒன்றும் மொத்தம் நான்கு முத்திரைகள் பிரயோகிக்கப்படுகின்றன. 

          நமஸ்காரத்தின் போது முதலில் சமநிலையில் நின்றவாறு, கைகளை மார்பின் முன்பு கடஹாமுக முத்திரையில் வைத்துக் கால்களால் வலது, இடது என்ற ஒழுங்கில் பூமியில் இருதடவை தட்ட வேண்டும். பின் இரு கைகளிலும் சிகர ஹஸ்தத்தை நீட்டிச் சுற்ற வேண்டும். பின் முழுமண்டியில் அமர்ந்து கைகளில் சதுர முத்திரை பிடித்து பூமியைத் தொட்டு கண்ணில் ஒற்றி அஞ்சலி ஹஸ்தத்தினால் வழிபடுதல் வேண்டும்.

நமஸ்காரத்தின் உட்பொருள்
       
           அன்னை பூமாதேவியிடம் அவள் மீது மிதித்து தட்டுவதற்கு மன்னிப்பு வேண்டுவது அதன் பொருள். அஞ்சலி கையை தலைக்கு மேல் உயர்த்தி கடவுளுக்கும், புருவமத்தியிலிருந்து குருவுக்கும், மார்புக்கு எதிரிலிருந்து சபையினருக்கும் அஞ்சலி செலுத்துவது மரபு. இவை தவிர வகுப்பில் கட்டிக் குச்சியையும் மேடையில் கைத்தாலத்தையும் தொட்டு வணங்குவதற்கும் உட்பொருள் உண்டு. அண்டசராசரமும் இயங்கிவருவது ஒரு சீரிய தாள அளவின் அடிப்படையில்தான். சூரிய உதயமும் , அஸ்தமனமும் ஒரு கால அளவைக் கொண்டு தானே நிகழ்ந்து கொண்டிருக்கிறது. தாளம் என்பது காலத்தையும் அதன் பிரிவுகளையும்தான் குறிக்கும். இவ்வகிலாண்ட வலயத்தோடு ஆடுபவலும் மனம் ஒருமித்து சற்று தியானித்து கைத்தாளத்திற்கு வணக்கம் செலுத்த வேண்டும். தாளக் கருவியாகிய மிருதங்கத்திர்க்கும் வணக்கம் செலுத்தல் மரபு. நாம் அன்றாடம் ஈடுபடும் செயல்கள் யாவுமே பரம்பொருளுக்கு செலுத்தும் வணக்கம் அவ்வழியில் செய்யும் தொழிலே தெய்வம் என்றுணர்ந்து கருத்தொருமித்து செயல்படுவதே தட்டிக் கும்பிடுவதன் உட்கருத்து.          








Tuesday, June 28, 2011

தில்லானா

            ஒரு சம்பிரதாய நடனக் கச்சேரியில் நிருத்த உருப்படிகளில் இறுதியாக ஆடப்படும் உருப்படி தில்லானாவாகும். அதாவது மங்களத்தின் முன் ஆடப்படும். இத்திள்ளான நாத்துருதீம், தனதிரனா, தம், தத்தீம் போன்ற சொற்கட்டுக்களை மையமாகக் கொண்டு இயற்றப்பட்ட உருப்படியாகும். இது மத்திம காலத்தில் அமைக்கப்பட்டிருக்கும். இசை, நடனம் ஆகிய இரண்டு கச்சேரிகளுக்கும் இது பொதுவானதாகும். இதன் அங்கங்கள் பல்லவி, அனுபல்லவி என்பவற்றைக் கொண்டிருக்கும். சில தில்லானாக்கள் பல்லவி, சரணம் என்பவற்றைக் கொண்டிருக்கும். சரணத்தில் இரண்டுவகை சாகித்தியம் காணப்படும். பாடும் பொது இதன் பல்லவியினை பலமுறை பாடுவார். இதற்க்கு தாள வின்யாஸ  முறையில் பலவிதமான அடவு ஜாதிகள் கோர்வைகளாக ஆடப்படும்.

            தில்லானாவின் மூலம் நடனமாடுபவரின் தாள, லய ஞானத்தினை அறிந்து கொள்ளமுடிகின்றது. இத்தில்லானாவை "திரிதில்லானா" எனவும் அழைப்பார். இதன் தாது விறுவிறுப்புடன் காணப்படும். தில்லானா என்னும் உருப்படியை உருவாக்கியவர் மகா வைத்தியநாத ஐயர், மைசூர் சதாசிவராவ், பட்டணம் சுப்பிரமணிய ஐயர், சுவாதித்திருநாள் என்போர் குறிப்பிடத்தக்கவர் ஆவார்.   

Friday, June 24, 2011

பதம்

            கடினமான ஜதிகளைக் கொண்ட வர்ணத்தை நீண்ட நேரம் ஆடிய பிறகு சாவதான முறையில் அபிநயத்திற்கு மட்டும் முக்கியத்துவம் அளித்து சில பதங்களை ஆடும் வழக்கம் இருந்துவருகின்றது. பதம் என்ற சொல் பொதுவாக வார்த்தைகளைக் குறிப்பிடும் பதம், பக்திப் பாடல் என்ற பொருளில் வழங்கிவந்திருந்தாலும், தஞ்சையை ஆண்ட விஜயராகவ நாயக மன்னன் காலத்திலிருந்து சிருங்கார ரஸப் பாடல் என்ற பொருளில் உபயோகிக்கப்படுகிறது என்று சிலர் கருதுவர். தாளப்பாக்கம் அன்னமாச்சாரியார் இயற்றிய சிருங்கார சங்கீர்த்தனங்களில் மதுர பக்தியைக் கையாண்டார். இவற்றைத் தழுவி  சேத்ரக்ஞர் பல அருமையான பதங்களை தெலுங்கு மொழியில் இயற்றினார். அவர் காலம் தொட்டு பதம் என்பதற்கு ஒரு தனி பாணியே ஏற்பட்டுவிட்டது. தலைவன் தலைவி உறவின் அடிப்படையில் 4500 பதங்களை இவர் இயற்றியதாக கூறப்படுகிறது. பானுதத்தரின் சிருங்கார ரசமஞ்சரி, மற்றும் பெத்த பெருமாள்ராயரின் சிருங்கார தண்டகம் போன்ற நூல்களில் காணப்படும் பலதரப்பட்ட தலைவன் தலைவி குணச்சித்திர இலக்கணங்களுக்கு பதங்கள் செயல்முறைப் பாடங்களாக விளங்குகின்றன.

             பதம் எனும் இசைப்பாடலின்  அமைப்பில்  பொதுவாக ஒரு பல்லவி, ஒரு அனுபல்லவி, ஒன்றோ அல்லது அதற்க்கு மேற்பட்ட சரணங்களோ உறுப்புக்களாக விளங்குகின்றன. அதன் இசையும் அனேகமாக சௌக காலத்திலோ அல்லது மத்யம காலத்திலோ அமைந்திருக்கும். பதங்களின் பொருள் அபிநயத்திற்கு வாய்ப்பளிப்பதாக அமைந்திருக்கும். பதங்களை அபிநயிப்பது எத்தனை உணர்ச்சிபூர்வமாக இருக்கவேண்டுமோ, அதே போல பாடுவதும் அமைந்திருக்கவேண்டும். பதத்தின் இசையமைப்பு அதில் காணும் கருத்துக்கு ஏற்றவண்ணம் அமைந்திருக்கும். கீழ்க்காலத்தில் பாடப்படவேண்டிய சில பதங்களை கையாளுவதை இசைத் துறையின் வல்லுனர்களும் பெரிய சாதனையாகக் கருதுவர். ஒவ்வொரு பதமும் அந்தந்த ராகத்தின் பல்வேறு அம்சம்களையும் பிழிந்தெடுத்துத் தரும் சாரமாக அமைந்திருக்கும்.

             பதங்களை நாட்டியதர்மி லோகதர்மி ஆகிய இரு வழக்குகளிலும் அபிநயிக்கலாம். இது அவரவர் அவைக்கு ஏற்ற வண்ணம் அமைத்துக் கொள்வது வழக்கம். அபிநயத்தின் சிறப்பம்சங்கள் யாவும் அனுபவம் மிக்க கலைஞர் பதம் ஆடுகையில் தானாகவே பரிமளித்து வருகிறது. ஒவ்வொரு பதமும் ஆடப்படும் பொழுது அந்தப்பதம் குறிக்கும் நாயகன் அல்லது நாயகி அல்லது சகியின் குணச்சித்திரம் வயது, சமூகத்தில்நிலை, சூழ்நிலை போன்ற பல கருத்துக்களைத் தெளிவாக புரிந்துகொண்ட முறையாக அபிநயிக்க வேண்டும். இன்னும் சொல்லப்போனால் ஒவ்வொரு பதத்திற்கும் பின்னால் ஒவ்வொரு சிறிய நாடகம் அடங்கி இருக்கும். ஆகவே பதத்தில் காணப்படும் பதங்களின் நேரான பொருளைத் தவிர அவற்றுள் அடங்கிய உட்கருத்துக்களையும் ஊகிக்கக் கூடிய கருத்துக்களையும் விரிவாக அபிநயிக்க பதத்தில் வாய்ப்புண்டு. இவ்வாறு அபிநயிப்பதற்கு சஞ்சாரி பாவம் என்று பொருள்.  

Thursday, June 23, 2011

கீர்த்தனை

            கீர்த்தனை எனும் சொல் இசைப்பாடல், புகழ்ச்சி எனப் பொருள்படும். கீர்த்தனைகள் கிருதிகளுக்கு முன்னோடியாகும். பதினைந்தாம் நூற்றாண்டில் தாளப்பாக்கம் அன்னமாச்சாரியார் அவர்கள் இதனை உருவாக்கினார். இவை பல்லவி, சரணம் என்ற அங்கங்களை உடையதாக இருந்தன. பின் பதினாறாம் நூற்றாண்டில் புரந்தரதாசர் பல்லவி, அனுபல்லவி, சரணம் ஆகிய பிரிவுகளை அறிமுகப்படுத்தினார். 

            கீர்த்தனைகள் பக்திச்சுவை மிகுந்தவைகளாகவும்,சில கீர்த்தனைகளில் சரணத்தின் பிற்பாகம் அனுபல்லவியின் வர்ணமெட்டை அனுசரித்ததாகவும் சில ஒரு சரணத்தையும் இன்னும் சில ஒன்றுக்கு மேற்பட்ட சரணங்களையும் கொண்டதாக இருக்கும். சில நேரங்களில் இவற்றின் சரணங்கள் தனித்தனியாக வர்ண மெட்டுக்களுடன் கூடியதாகவும் அமைக்கப்பட்டிருப்பதக் காணலாம். 

             சில கீர்த்தனைகளின் சொற்கட்டு அணிகளுக்கு அடவுகள் செய்யப்படுகின்றன. இவை கீர்த்தனைகளுக்கு அழகைக் கூட்டுவனவாக உள்ளன. சில சமயங்களில் கீர்த்தனைகளுக்கு கர்ப்பனாஸ்வரங்கள் பாடப்பட்டு அதற்கும் அடவுக் கோர்வைகள் செய்யப்படுகின்றன. பல உருப்படிகள் இறைவன் மேல் பாடப்பட்டதாகவே காணப்படுகின்றன. சில உருப்படிகள் வீர உணர்ச்சியைத் தோற்றுவிக்கவும், இன்னும் சில பெரியோர்களின் குணங்களை எடுத்துக் காட்டவும் நாட்டுவளம், இனத்தின் பெருமை, மொழி, கலை கலாச்சாரம் ஆகியவற்றைக் குறித்தும் பாடப்பட்டிருக்கும். பொதுவாக ஆதி ரூபக தாளங்களிலமைந்த கீர்த்தனைகளையே பெரும்பாலும் காணலாம். ஏனைய தாளங்களிலமைந்த உருப்படிக்களுமுண்டு. பெரும்பாலான உருப்படிகள் சம எடுப்பாகவும் , அரை இட எடுப்பாகவும் (அதீத) காணலாம். சில கீர்த்தனைகளின் இறுதியில் இயற்றியவர் தனது பெயரையோ புனைப்பெயரையோ முத்திரையாகச் சேர்த்திருப்பதைக் காணலாம். கீர்த்தனைகளில் சாகித்யத்தைப் பாடுவதற்காக தாது ஒரு கருவியாக உபயோகிக்கப்படுகிறது. கீர்த்தனையில் சாகித்தியமே முக்கிய அம்சமாகும். இதனை தியாகராஜர், கோபாலகிருஷ்ணபாரதி, மீனாட்சிசுந்தரம்பிள்ளை, பாபநாசம் சிவன், பொன்னையாப்பிள்ளை போன்றோர் எழுதியுள்ளனர்.

Wednesday, June 22, 2011

வர்ணம்

            பரதநாட்டிய நிகழ்ச்சியில் சப்தத்தைத் தொடர்ந்துவரும் நிகழ்ச்சியாக வர்ணம் அமைந்துள்ளது. ஒரு நாட்டிய நிகழ்ச்சியின் சிகரமாக விளங்கும் வர்ணமானது இசைக்கும் நடனத்துக்கும் பொதுவானதாகும். பாட்டிற்குரியவகையில் தானவர்ணம் என்றும், பரதத்துக்குரிய வகையில் பதவர்ணம் என்றும் அழைப்பர். வர்ணம் பூர்வாங்கம், உத்தராங்கம் எனும் இரு பிரிவுகளை உடையது. பூர்வாங்கம் என்பது பல்லவி, அனுபல்லவி, முத்தாயீஸ்வரம் என்ற சிரமத்தைக் கொண்டுள்ளது. உத்தராங்கம் என்பது சரணம்,சரணஸ்வரங்கள் என்பவற்றைக் கொண்டிருக்கும். சரணத்திற்கு எத்துக் கடைப்பல்லவி என்றும் உபபல்லவி என்றும் வேறு பெயர் உண்டு.

            வர்ணங்களில் ஆடலிற்காக   அமைந்தவை தமிழிலும், தெலுங்கிலும் அதிகமாக இருக்கின்றன. அதிகமாக கையாளப்படும் வர்ணங்களில் சில....... 
  1. காமிகி சரிவெரோ :- சங்கராபரணம்.
  2. மனவி செயசொனராதா :- சங்கராபரணம்.
  3. மோஹமான :-பைரவி.
  4. ஏமகுவ :- தன்பாசி.
  5. தானிகே :- தோடி.
          சகியே :- ஆனந்தபைரவி. (பத ஜதி வர்ணம்) 

Monday, June 20, 2011

சப்தம்

            நாட்டிய உருப்படிகளின் வரிசையில் மூன்றாவதாக வரும் உருப்படி சப்தமாகும். முதன்முதலில் அபிநயத்தை அறிமுகப்படுத்தும் உருப்படியும் இதுவாகும். இவ்வுருப்படிகள் சிவபெருமான், கண்ணன், முருகப்பெருமான், ஸ்ரீராமன் மேல்  பாடப்பட்டவையாகும். ஆரம்பத்தில் சப்தங்கள் யாவும் காம்போஜி ராகத்தில் தான் பாடப்பட்டுவந்தன. ஆனால் இப்போது ராகமாலிகாவிலும் பாடப்படுகிறது. இவ்வுருப்படி பெரும்பாலும் மிஸ்ரசாவு தாளத்தில்தான் அமைந்துள்ளது. இது பத்து தொடக்கம் பதினைந்து நிமிடங்களுக்கு அமைந்திருக்கும். 

            சப்தம் என்ற சொல்லுக்கு சிறப்புப்பொருள் உண்டு. அதாவது தெய்வத்தினை புகழ்ந்து பாடுதல் எனப்பொருள்படும். சப்தம் என்ற இவ்வுருப்படி ஜதியுடன் ஆரம்பமாகும். இதனைத்தொடர்ந்து சாகித்யம் இடம்பெறும். இதற்க்கு அபிநயம் காண்பிக்கப்படுகிறது. சாகித்யத்துக்கு நேர்க்கைகளும் சஞ்சாரி பாவத்திற்குரிய கைகளும் செய்யப்படுகின்றன. இவ்வுருப்படியின் ஆரம்பத்திலும் இடையிலும் முடிவிலும் ஜதிகள் அமைந்துள்ளன. பாடலில் கருத்து முகபாவத்தாலும், முத்திரைகளினாலும் வெளிக்காட்டப்படுகிறது. ஒவ்வொரு கண்டிகைக்கும் அபிநயம் செய்தபின் தொடர்ந்துவரும் ஜாதிகளுக்கு கோர்வை செய்யப்படுகின்றது. சப்தத்தில் இராமாயணம், தசாவதாரம், கஜேந்திர மோஷம் முதலிய தொடர்கதைகளை வைத்தோமைத்த நீண்ட உருப்படிகளும் உண்டு. கிருஷ்ண சப்தம், மண்டூக சப்தம், கோதண்டராமா சப்தம் என்று சங்கங்கள் உண்டு. சப்தத்தின் இறுதியில் "சாலமுரே" அல்லது "நமோஸ்துதே" இடம்பெறும். இதன் பொருள் வணக்கம் செலுத்துவது என்பதாகும்.

Wednesday, June 15, 2011

ஜதீஸ்வரம்

            அலாரிப்பிற்கு அடுத்த நிகழ்ச்சி ஜதீஸ்வரமாகும். இது ஸ்வரங்களையும், ஜதிகளையும் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. இது பல்லவி, அனுபல்லவி,சரணம் என்ற பகுதிகளை உடையது. ஜதீஸ்வரத்தில் முதல் ஸ்வரப் பகுதியை எடுத்துப்பாடியதும் மேற்காலத்தில் ஒரு ஜதியுடன் நிகழ்ச்சி தொடங்குகின்றது. இவ்வுருப்படியை மேலும் மெருகூட்டுவதற்காக ஒருசில மெய்யடைவுகளை ஜதீஸ்வரத்தின் ஆரம்பத்திலும் சில கோர்வைகளின் இறுதியிலும் செய்கின்றார்கள்.

            ஜதீஸ்வரத்தில் ஸ்வரங்களுக்கு ஏற்றவாறு கோர்வை அமைக்கப்பட்டுள்ளது. ஒரு பல்லவிக்கு பல அடவு கோர்வைகள் அமைக்கப்பட்டிருக்கும். கோர்வைகள் யாவும் தாளக்கதியாலும், அடவுகளினாலும் வேறுபட்டிருக்கும். பல்லவியை அடுத்து அனுபல்லவி காணப்படும். இதற்க்கு மேற்க்காலத்தில் கோர்வைகள் அமைக்கப்பட்டிருக்கும். அனுபல்லவியை அடுத்து சரணங்கள் காணப்படும். ஜதீஸ்வரத்தில் ஆரம்பத்திலும், மத்தியிலும், இறுதியிலும் மெய்யடவு ஆடப்படுகிறது.

       ஜதீஸ்வரம் பல ராகங்களிலும், தாளங்களிலும் கையாளப்பட்டுவருகின்றது. இவ்வுருப்படி அநேகமாக ஆதி தாளத்திலும், ரூபக தாளத்திலும் அமைக்கப்பட்டுள்ளது. ஸ்வரங்களுக்கு ஏற்றவாறு அடவுகளைத் தெரிவுசெய்து ஆடினால் எடுப்பாக இருக்கும். இவ்வுருப்படியை பொன்னையாப்பிள்ளை, சுவாதித்திருநாள் மகாராஜா போன்ற பலர் இயற்றியுள்ளனர். இது ஐந்து அல்லது ஆறு நிமிடங்களுக்குரிய உருப்படியாக அமைந்துள்ளது. ஜதீஸ்வரத்தை ஸ்வரப்பல்லவி என்றும் அழைப்பதுண்டு.           

Tuesday, June 14, 2011

அலாரிப்பு

            அலாரிப்பு என்ற சொல் தமிழில் மலர்வது என்று பொருள்படும். இவ்வுருப்படி நடனமாடுபவர் தன் உடலை மலராக நினைத்து அதனைக் கடவுளுக்கு அர்ப்பணம் செய்வது போல் அமைக்கப்பட்டுள்ளது. உருப்படிகளின் வரிசையில் இது ஆரம்ப நிகழ்ச்சியாக விளங்கும். தலைக்கு மேலிருந்து அஞ்சலி ஹஸ்தத்தில் இருந்து ஆரம்பமாகும். குரு, தெய்வம், சபையினர் என்போருக்கு வந்தனம் செலுத்தும் நிகழ்ச்சியாகவும் இது அமைந்துள்ளது. இது எவ்வித பாடல்களோ, அபிநயங்களோ இன்றி ஆடப்படும் உருப்படியாகும். இதில் "தாம்திதா தெய்ததெய்" எனும் சொற்கட்டு விளம்ப, மத்யம, துரித காலங்களில் இடம்பெறுகிறது. இவ்வுருப்படி "நாட்டை" இராகத்தில் பாடப்படுகிறது.

            நாட்டியத்திற்குரிய உறுப்புகளில் மிக முக்கியமான கண், முகம், கழுத்து ஆகியவற்றின் அசைவுகளும், கை, கால்களின் அசைவுகளும் அலாரிப்பில் இடம்பெறுகின்றன. இவ்வுருப்படி ஆரம்பிக்கும்போது கால்கள் சமபாதத்திலும், திருஷ்டி சாமத்திலும், கைகள் நாட்டியாரம்பத்திலும் இருக்கும். கண், கழுத்து, தோள் ஆகியவற்றின் அசைவுகளுடன் படிப்படியாக ஆரம்பித்து கைகள், கால்களின் அசைவுகளுடன் தொடர்ந்து அரைமண்டி, முழுமண்டி நிலைகளில் அமர்ந்து இதனைச்செய்வர். நர்த்தகி தன்னை இறைவனுக்கு அர்ப்பணிப்பதே இதன் குறிக்கோளாகும். 

            கழுத்தின் அசைவில் கழுத்து மட்டுமே குறுக்காக அசைய வேண்டும்.இதனை "அட்டமி" என்று அளப்பார். அதனை "சுந்தரி" என்று சமஸ்கிருதத்தில் கூறுவார். அட்டமி ஆட்டத்திற்கு களை கொடுக்கும் தன்மையானது. அலாரிப்பில் பலவித மண்டலபேதங்களும், முத்திரைகளும், சிரோபேதங்களும், திருஷ்டிபேதங்களும் க்ரீவாபேதங்களும் இடம்பெறுகின்றன.

            மண்டலங்களில் ஸ்தானம், ஆயத்தம், ப்றேங்கனம், பார்வசூசி, ஸ்வஸ்திகம் போன்ற பேதங்கள் இடம்பெறுகின்றன. பதாகம், திரிபதாகம், அலபத்மம், கடஹாமுகம், குழிபதாகம் போன்ற முத்திரைகளும், சமம், உத்வாஹிதம், அதோமுகம், கம்பிதம் போன்ற சிரோ பேதங்களையும் , சமம், சாசி, ப்ரலோகிதம், உள்லோகிதம் போன்ற திருஷ்டிபேதங்களையும், க்ரீவா பேதத்தில் "சுந்தரி" என்பதையும் கொண்டதாக அமைகின்றது. அலாரிப்பு ஒரு விறு தீர்மானத்துடன் முடிவடைகின்றது. இத்தீர்மானம் அநேகமாக துரித காலத்தில் அமைந்திருக்கும். இது ஐந்து ஜாதிகளிலும் அமைக்கப்பட்டிருந்தாலும், பெரும்பாலும் திஸ்ரம், மிஸ்ரம், இரண்டுமே வழக்கத்தில் உள்ளன. இந்நிகழ்ச்சி மூன்று நிமிடங்களுக்குரியதாக அமைக்கப்பட்டுள்ளது.   

Saturday, June 11, 2011

உலகியல் வரலாறு

            ஆதியில் மனிதன் பூமியில் ஜனனித்ததும் அவனுக்கு ஞானம் உண்டாகவில்லை. அவனும் மற்ற மிருகங்கள் போல் தன் சந்தோசத்தையோ கஷ்டத்தையோ வெளிக்காட்ட கத்திக்கொண்டும், உறுமிக்கொண்டும் பலவிதமாக சத்தமிட்டுக் கொண்டிருந்தான். படிப்படியாக அந்த சத்தத்திலிருந்து பாஷையை உருவாக்கிக் கொண்டான். 

            மனிதனுக்கு சந்தோஷம் வந்தால் சிரிப்பதும், கூத்தாடுவதும், கோபம் மிகுந்தால் பரபரப்புடன் பேசுவதும் இயற்கை. சந்தோஷ மிகுதியால் மனிதன் கூச்சலிட்டான், குதித்துக் கூத்தாடினான். கைகளை கூத்திற்குச் சரியாகக் கொட்டினான். அவன் கூச்சலிட்டது இசையாகவும், கைகளைக் கொட்டியது தாளமாகவும் மாறியது. இசை, கூத்து, தாளம் இம்மூன்றையும் மனிதன் தன்னையறியாமலே கண்டுபிடித்துவிட்டான்.    

புராண வரலாறு

            அறுபத்து நான்கு கலைகளில் ஒன்றாக கருதப்படும் பரதக்கலை, பாரத நாட்டின் தெய்வீகக் கலையாக போற்றப்படுகின்றது. காரணம் ஆரம்ப கால மக்கள் அதிக துயரத்தில் ஆழ்ந்து கிடந்தனர். இந்நிலை மாறி எங்கும் இன்பம் உண்டாகும் வண்ணம், அனைவரும் புரிந்து கொள்ளுமாறு நான்கு வேதங்களில் இருந்து ஒரு பொழுதுபோக்கை உருவாக்குமாறு இந்திரன் பிரம்மாவை வேண்டினார். இதற்கமைய இருக்கு வேதத்தில் இருந்து நாட்டியத்தையும், யசூர் வேதத்திலிருந்து அபிநயத்தையும், சாம வேதத்திலிருந்து இசையையும், அதர்வ வேதத்திலிருந்து ரஸத்தினையும் தொகுத்து ஐந்தாம் வேதமாக நாட்டியக்கலையினை படைத்தார்.  

            பிரம்மா தான் படைத்த நாட்டியக்கலையை முதலில் பாரத முனிவருக்கு கற்பித்தார். இதனைப் பரதர் கந்தர்வர்கள், அப்சரஸ் பெண்களுக்கு கற்றுக் கொடுத்தார். பின்னர் கைலயங்கிரியில் சிவன் முன்னிலையில் இப்பெண்கள் நிருத்தம், நிருத்தியம், நாட்டியம் என்பவற்றை ஆடிக்காட்டினர். இதனைக் கண்டு மகிழ்ந்த சிவன் தான் இயற்றிய நர்த்தனத்தை நினைவு கூர்ந்து தண்டு முனிவரை அழைத்து அதனை பரதருக்கு கற்று கொடுக்கும்படி கூறினார். தண்டு முனிவரால் எடுத்துச் சொல்லப்பட்டமையால் இது 'தாண்டவம்' என பெயர் பெற்றது.  


            பார்வதி தேவி லாஸ்யம் என்னும் நடனத்தினை பாணனின் மகளும், அனுருத்திரனின் மனைவியுமாகிய உசைக்கு கற்றுக்கொடுத்தார். உசை இதனை துவாரகையிலுள்ள இடைச்சேரிப் பெண்களுக்குக் கற்பித்தார். பின் இவர்கள் மூலம் இக்கலை உலகெங்கும் பரவியது. 

அரும் பத விளக்கம்.

           பரதம் என்ற சொல்லில் வரும்............................ 
:- பாவத்தைக் குறிக்கும். இன்பம் துன்பம் ஆகிய உணர்ச்சிகளினால் தாக்கப்படும் போது அங்கங்களில் வெளிக்காட்டப்படும் அசைவுகள் பாவம் எனப்படும்.

:- ராகத்தைக்க் குறிக்கும். ஸ்வரங்களின் சேர்க்கை ராகமாகும். எழு ஸ்வரங்கள் சேர்ந்து 72 தாய் ராகங்கள் உருவாகின்றன.

:- தாளத்தைக் குறிக்கும். இது லயத்தைக் கட்டுப்படுத்தக்கூடியதொன்று. அடிப்படையான தாளம் ஏழு வகைப்படும். அவை பின் 35 தாளங்களாகவும் 175  தாளங்களாகவும் முறையே ஜதி பேதத்தாலும் கதி பேதத்தாலும் மாற்றம் அடைகின்றது. 


Friday, June 10, 2011

பரதம் என்னும் பதம்

            பரதக்கலை பற்றிய ஆராய்ச்சிக்கு முதலில் பரதக்கலையில் செறிந்துள்ள ஆழமான கருத்தினை ஆராய்தல் பொருத்தமானதாகும். இத்தெய்வீகத் திருக்கலையினையே நாம் பல்வேறு நூல்கள், ஏடுகள், குறிப்புகள் என்பவற்றில் பரதம் என குறிப்பிட்டுள்ளதைக் காணக்கூடியதாகவுள்ளது. எனவே 'பரதம்' என்னும் பதம் எவ்வடிப்படை மூலங்களைக் கொண்டு பின்னிப் பிணைந்துள்ளது என்பதனை அறிதல் பொருத்தமானதாகும். பரதக்கலையின் முக்கண்களாக திகழ்வன; பாவம், ராகம், தாளம் என்னும் கலைக்கூறுகளாகும். இம்மூன்று சொற்களிலும் முதல் எழுத்துக்களாக திகழ்வன ப,ர,த என்னும் எழுத்துக்களாகும். அதே மூன்று சொற்களிலும் இறுதி எழுத்தாக திகழ்வது "ம்" என்னும் எழுத்தாகும். இதுவே இறுதியும், பொதுவானதுமான எழுத்தாகும். எனவே மூன்று சொற்களின் முதல் எழுத்துக்களையும், அதே மூன்று சொற்களின் இறுதி எழுத்தாகிய "ம்" எனும் எழுத்தும் சேர்த்து 'பரதம்' என்னும் பதம் புனையப்பட்டுள்ளது. 

            பழந்தமிழர் வரலாற்றுக் குறிப்புகளில் தமிழ் மக்கள் இயல், இசை, நாடகம் ஆகிய கலைகளில் சிறப்பிடம் பெற்று விளங்கினர் என்பதற்கான பல ஆதாரங்களை கலைகளில் இன்றும் நாம் காண்கிறோம். பல்வேறு காலங்களாகப் போற்றி பேணி மெருகூட்டி வளர்க்கப்பட்டு வந்த தெய்வீகத் திருக்கலையான  நாட்டியக்கலையானது, பிற்காலத்தில் துரதிஷ்டவசமாக சமூக சீரழிவுகளுக்கு உட்படுத்தப்பட்டு, காலச்சக்கரத்தில் சிக்குண்டு, இழிவு நிலைக்கு தள்ளப்பட்டு, உதாசீனம் செய்யப்பட்டது, வருத்தத்துக்குரிய விடயமேயாகும். குறிப்பாக சென்ற நூற்றாண்டின் முற்பகுதியிலும், 19ம் நூற்றாண்டின் இறுதியிலும், இந்நாட்டியக்கலையின் மகத்துவத்தையும், தெய்வீக கலையம்சத்தையும் அறியாத மக்கள் அதனை உதாசீனம் செய்தனர். எனினும் இன்று எமது நாட்டியக்கலையின் ஆராய்ச்சியானது சில பல தவிர்க்கமுடியாத வெற்றிடங்கள், அடிப்படைச் சுலோகத்தின் மீது கொண்ட ஊகங்கள், முரண்பாடுகள் என்பவற்றுடன் காணப்படினும் அதன் தெய்வீகப்பலமும், தெய்வீக சக்தியும் இன்றுவரை அதனை நிலைகொள்ளச் செய்துவிட்டது.  
            இன்றைய நாட்டியக்கலை சம்பந்தமான ஆராய்ச்சிக்கு தமிழில் நமக்கு கிடைத்துள்ள அரிய பண்டைய நூல்கள் சிலப்பதிகாரமும், அடியார்க்கு நல்லாரின் சிலப்பதிகார உரையும் சிறப்பிடம் பெறுகின்றன. இது தவிர, நாட்டியத்தில் சில வடமொழி மொழிபெயர்ப்புகளும், சிறந்த சேவையாற்றி வருகின்றன. இவை பெரும்பாலும் வடமொழியிலுள்ள சுலோகங்களின் நேரடித் தமிழ் மொழிபெயர்ப்புக்கள் ஆகும். டாக்டர். உ. வே. சாமிநாத ஐயர் தமிழ் இலக்கியத்துறைக்கு மட்டுமன்றி தமிழ் கலையுலகத்திட்கும் சிறந்த தொண்டாற்றியுள்ளார். உதாரணமாக வடமொழியில் இயற்றப்பட்ட அபிநயத்தர்ப்பணம் நந்திகேஸ்வரரால் இயற்றப்பட்டது. இதன் தமிழ் மொழிபெயர்ப்பு வீரராகவையன் என்பவரால் மேற்கொள்ளப்பட்டதாக வரலாற்றுக் குறிப்பொன்று சாட்சி பகிர்கின்றது. டாக்டர். உ. வே. சாமிநாத ஐயரின்தொகுப்பில் இந்நூலின் காகிதச் சுவடி ஒன்று அடக்கப்பட்டிருந்தது என அறியப்படுகின்றது. 
           
               இன்றைய நாட்டியக்கலை ஆராய்ச்சிக்கு தென்னிந்திய கோயிற் சிற்பங்கள், அவற்றுக்கு கீழ் எழுதப்பட்ட சுலோகங்கள், கோயிற் கோபுரங்கள், கோயில்களில் வரையப்பட்டுள்ள ஓவியங்கள், சில கோவிற் கல்வெட்டுக்கள் என்பன அதி முக்கிய பங்கினை வகிக்கின்றன. மேலும் அடிப்படை உண்மைகளும், அதன் தெய்வீகக் கோட்பாடுகள் என்பனவும், குருகுலங்கள் மூலமாகவும், வாய்மொழி மூலமாகவும் பாதுகாக்கப்பட்டும், வளர்க்கப்பட்டும் வந்தன.