Thursday, June 23, 2011

கீர்த்தனை

            கீர்த்தனை எனும் சொல் இசைப்பாடல், புகழ்ச்சி எனப் பொருள்படும். கீர்த்தனைகள் கிருதிகளுக்கு முன்னோடியாகும். பதினைந்தாம் நூற்றாண்டில் தாளப்பாக்கம் அன்னமாச்சாரியார் அவர்கள் இதனை உருவாக்கினார். இவை பல்லவி, சரணம் என்ற அங்கங்களை உடையதாக இருந்தன. பின் பதினாறாம் நூற்றாண்டில் புரந்தரதாசர் பல்லவி, அனுபல்லவி, சரணம் ஆகிய பிரிவுகளை அறிமுகப்படுத்தினார். 

            கீர்த்தனைகள் பக்திச்சுவை மிகுந்தவைகளாகவும்,சில கீர்த்தனைகளில் சரணத்தின் பிற்பாகம் அனுபல்லவியின் வர்ணமெட்டை அனுசரித்ததாகவும் சில ஒரு சரணத்தையும் இன்னும் சில ஒன்றுக்கு மேற்பட்ட சரணங்களையும் கொண்டதாக இருக்கும். சில நேரங்களில் இவற்றின் சரணங்கள் தனித்தனியாக வர்ண மெட்டுக்களுடன் கூடியதாகவும் அமைக்கப்பட்டிருப்பதக் காணலாம். 

             சில கீர்த்தனைகளின் சொற்கட்டு அணிகளுக்கு அடவுகள் செய்யப்படுகின்றன. இவை கீர்த்தனைகளுக்கு அழகைக் கூட்டுவனவாக உள்ளன. சில சமயங்களில் கீர்த்தனைகளுக்கு கர்ப்பனாஸ்வரங்கள் பாடப்பட்டு அதற்கும் அடவுக் கோர்வைகள் செய்யப்படுகின்றன. பல உருப்படிகள் இறைவன் மேல் பாடப்பட்டதாகவே காணப்படுகின்றன. சில உருப்படிகள் வீர உணர்ச்சியைத் தோற்றுவிக்கவும், இன்னும் சில பெரியோர்களின் குணங்களை எடுத்துக் காட்டவும் நாட்டுவளம், இனத்தின் பெருமை, மொழி, கலை கலாச்சாரம் ஆகியவற்றைக் குறித்தும் பாடப்பட்டிருக்கும். பொதுவாக ஆதி ரூபக தாளங்களிலமைந்த கீர்த்தனைகளையே பெரும்பாலும் காணலாம். ஏனைய தாளங்களிலமைந்த உருப்படிக்களுமுண்டு. பெரும்பாலான உருப்படிகள் சம எடுப்பாகவும் , அரை இட எடுப்பாகவும் (அதீத) காணலாம். சில கீர்த்தனைகளின் இறுதியில் இயற்றியவர் தனது பெயரையோ புனைப்பெயரையோ முத்திரையாகச் சேர்த்திருப்பதைக் காணலாம். கீர்த்தனைகளில் சாகித்யத்தைப் பாடுவதற்காக தாது ஒரு கருவியாக உபயோகிக்கப்படுகிறது. கீர்த்தனையில் சாகித்தியமே முக்கிய அம்சமாகும். இதனை தியாகராஜர், கோபாலகிருஷ்ணபாரதி, மீனாட்சிசுந்தரம்பிள்ளை, பாபநாசம் சிவன், பொன்னையாப்பிள்ளை போன்றோர் எழுதியுள்ளனர்.

No comments:

Post a Comment