Friday, June 24, 2011

பதம்

            கடினமான ஜதிகளைக் கொண்ட வர்ணத்தை நீண்ட நேரம் ஆடிய பிறகு சாவதான முறையில் அபிநயத்திற்கு மட்டும் முக்கியத்துவம் அளித்து சில பதங்களை ஆடும் வழக்கம் இருந்துவருகின்றது. பதம் என்ற சொல் பொதுவாக வார்த்தைகளைக் குறிப்பிடும் பதம், பக்திப் பாடல் என்ற பொருளில் வழங்கிவந்திருந்தாலும், தஞ்சையை ஆண்ட விஜயராகவ நாயக மன்னன் காலத்திலிருந்து சிருங்கார ரஸப் பாடல் என்ற பொருளில் உபயோகிக்கப்படுகிறது என்று சிலர் கருதுவர். தாளப்பாக்கம் அன்னமாச்சாரியார் இயற்றிய சிருங்கார சங்கீர்த்தனங்களில் மதுர பக்தியைக் கையாண்டார். இவற்றைத் தழுவி  சேத்ரக்ஞர் பல அருமையான பதங்களை தெலுங்கு மொழியில் இயற்றினார். அவர் காலம் தொட்டு பதம் என்பதற்கு ஒரு தனி பாணியே ஏற்பட்டுவிட்டது. தலைவன் தலைவி உறவின் அடிப்படையில் 4500 பதங்களை இவர் இயற்றியதாக கூறப்படுகிறது. பானுதத்தரின் சிருங்கார ரசமஞ்சரி, மற்றும் பெத்த பெருமாள்ராயரின் சிருங்கார தண்டகம் போன்ற நூல்களில் காணப்படும் பலதரப்பட்ட தலைவன் தலைவி குணச்சித்திர இலக்கணங்களுக்கு பதங்கள் செயல்முறைப் பாடங்களாக விளங்குகின்றன.

             பதம் எனும் இசைப்பாடலின்  அமைப்பில்  பொதுவாக ஒரு பல்லவி, ஒரு அனுபல்லவி, ஒன்றோ அல்லது அதற்க்கு மேற்பட்ட சரணங்களோ உறுப்புக்களாக விளங்குகின்றன. அதன் இசையும் அனேகமாக சௌக காலத்திலோ அல்லது மத்யம காலத்திலோ அமைந்திருக்கும். பதங்களின் பொருள் அபிநயத்திற்கு வாய்ப்பளிப்பதாக அமைந்திருக்கும். பதங்களை அபிநயிப்பது எத்தனை உணர்ச்சிபூர்வமாக இருக்கவேண்டுமோ, அதே போல பாடுவதும் அமைந்திருக்கவேண்டும். பதத்தின் இசையமைப்பு அதில் காணும் கருத்துக்கு ஏற்றவண்ணம் அமைந்திருக்கும். கீழ்க்காலத்தில் பாடப்படவேண்டிய சில பதங்களை கையாளுவதை இசைத் துறையின் வல்லுனர்களும் பெரிய சாதனையாகக் கருதுவர். ஒவ்வொரு பதமும் அந்தந்த ராகத்தின் பல்வேறு அம்சம்களையும் பிழிந்தெடுத்துத் தரும் சாரமாக அமைந்திருக்கும்.

             பதங்களை நாட்டியதர்மி லோகதர்மி ஆகிய இரு வழக்குகளிலும் அபிநயிக்கலாம். இது அவரவர் அவைக்கு ஏற்ற வண்ணம் அமைத்துக் கொள்வது வழக்கம். அபிநயத்தின் சிறப்பம்சங்கள் யாவும் அனுபவம் மிக்க கலைஞர் பதம் ஆடுகையில் தானாகவே பரிமளித்து வருகிறது. ஒவ்வொரு பதமும் ஆடப்படும் பொழுது அந்தப்பதம் குறிக்கும் நாயகன் அல்லது நாயகி அல்லது சகியின் குணச்சித்திரம் வயது, சமூகத்தில்நிலை, சூழ்நிலை போன்ற பல கருத்துக்களைத் தெளிவாக புரிந்துகொண்ட முறையாக அபிநயிக்க வேண்டும். இன்னும் சொல்லப்போனால் ஒவ்வொரு பதத்திற்கும் பின்னால் ஒவ்வொரு சிறிய நாடகம் அடங்கி இருக்கும். ஆகவே பதத்தில் காணப்படும் பதங்களின் நேரான பொருளைத் தவிர அவற்றுள் அடங்கிய உட்கருத்துக்களையும் ஊகிக்கக் கூடிய கருத்துக்களையும் விரிவாக அபிநயிக்க பதத்தில் வாய்ப்புண்டு. இவ்வாறு அபிநயிப்பதற்கு சஞ்சாரி பாவம் என்று பொருள்.  

No comments:

Post a Comment