Wednesday, June 15, 2011

ஜதீஸ்வரம்

            அலாரிப்பிற்கு அடுத்த நிகழ்ச்சி ஜதீஸ்வரமாகும். இது ஸ்வரங்களையும், ஜதிகளையும் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. இது பல்லவி, அனுபல்லவி,சரணம் என்ற பகுதிகளை உடையது. ஜதீஸ்வரத்தில் முதல் ஸ்வரப் பகுதியை எடுத்துப்பாடியதும் மேற்காலத்தில் ஒரு ஜதியுடன் நிகழ்ச்சி தொடங்குகின்றது. இவ்வுருப்படியை மேலும் மெருகூட்டுவதற்காக ஒருசில மெய்யடைவுகளை ஜதீஸ்வரத்தின் ஆரம்பத்திலும் சில கோர்வைகளின் இறுதியிலும் செய்கின்றார்கள்.

            ஜதீஸ்வரத்தில் ஸ்வரங்களுக்கு ஏற்றவாறு கோர்வை அமைக்கப்பட்டுள்ளது. ஒரு பல்லவிக்கு பல அடவு கோர்வைகள் அமைக்கப்பட்டிருக்கும். கோர்வைகள் யாவும் தாளக்கதியாலும், அடவுகளினாலும் வேறுபட்டிருக்கும். பல்லவியை அடுத்து அனுபல்லவி காணப்படும். இதற்க்கு மேற்க்காலத்தில் கோர்வைகள் அமைக்கப்பட்டிருக்கும். அனுபல்லவியை அடுத்து சரணங்கள் காணப்படும். ஜதீஸ்வரத்தில் ஆரம்பத்திலும், மத்தியிலும், இறுதியிலும் மெய்யடவு ஆடப்படுகிறது.

       ஜதீஸ்வரம் பல ராகங்களிலும், தாளங்களிலும் கையாளப்பட்டுவருகின்றது. இவ்வுருப்படி அநேகமாக ஆதி தாளத்திலும், ரூபக தாளத்திலும் அமைக்கப்பட்டுள்ளது. ஸ்வரங்களுக்கு ஏற்றவாறு அடவுகளைத் தெரிவுசெய்து ஆடினால் எடுப்பாக இருக்கும். இவ்வுருப்படியை பொன்னையாப்பிள்ளை, சுவாதித்திருநாள் மகாராஜா போன்ற பலர் இயற்றியுள்ளனர். இது ஐந்து அல்லது ஆறு நிமிடங்களுக்குரிய உருப்படியாக அமைந்துள்ளது. ஜதீஸ்வரத்தை ஸ்வரப்பல்லவி என்றும் அழைப்பதுண்டு.           

No comments:

Post a Comment