Friday, July 22, 2011

அருணாசலக்கவிராயர்

            சோழ நாட்டிலே மாயூரம் என்ற தலத்தை அடுத்துள்ள தில்லையாடி என்ற ஊரில் வேளாளர் மரபில் பிறந்த நல்லதம்பி என்பவருக்கும், வள்ளியம்மை என்பவருக்கும் 1634 ம் விஜய ஆண்டில் பிறந்தார். 12 ஆவது வயது நிரம்ப முன்னரே தமிழ்ப் பள்ளியில் பயிற்சி பெற வேண்டிய கல்வியைச் செவ்வனே கற்றார். இளமையிலேயே தாய் தந்தையரை இழந்தார். எனவே மேற்கொண்டு தமது கல்வியை வளர்த்துக்கொள்ளும் அவாவினால் தாம் பிறந்த ஊருக்கு சமீபமான தர்மபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள சைவ மடத்தில் வளர்ந்து தென்மொழி, வடமொழிகளில் சிறந்து விளங்கினார். சைவசீலர்களாக விளங்கிய தம்பிரர்கள் பலரிடம் தமிழ் இலக்கண இலக்கியங்களும் கற்றுச் சிறந்து விளங்கினார். 

           தர்மபுரத்து பண்டார சந்நியாசியாகிய தர்மப்புரம் பண்டாரம் அம்பலவாணக் கவிராயர் இவருக்கு தமிழ் அறிவு புகட்டிய நல்லாசிரியர். இவருடைய மதிநுட்பத்தையும்,அறிவுச்செல்வத்தையும் மெச்சி பண்டார சந்நியாசிகள் இவரை ஆதீனத்தின் தலைமைப் பொறுப்பை வழங்க முன்வந்தர். ஆனால் இவர் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. 12 ஆண்டுகள் மடத்தில் இருந்து கல்வி கற்ற பின்னர் அங்கிருந்து தமது ஊர் வந்து சேர்ந்து மென்மேலும் தமிழ் மொழியிலுள்ள அரிய நூல்களை இடையறாது படித்து தம் புலைமையை விருத்தி செய்துகொண்டு தம்முடைய முப்பதாவது வயதில் தம் உறவினர் குடும்பத்தில் சீர் மங்கையை மணந்து இல்லறம் நடாத்தத் தொடங்கினார். காசுக்கடை வைத்து அதனால் வாழ்க்கைக்கு வேண்டிய பொருட்களையும் ஈட்டி வைத்தார்.

           இவர் படித்த நாட்களில் கம்பர் இயற்றிய  ராமாயணத்தை அழுத்தம் திருத்தமாகப் படித்தும், பலருக்கும் கற்பித்தும் பொது மன்றங்கள் பலவற்றில் எல்லோரும் கேட்டு மகிழும் படி இன்னிசையோடு பயிற்றியும் வந்தார். இவ்வாறு வாழ்க்கை நடத்திவருங்கால், தம் வணிக நிமித்தம் பொன், வெள்ளி ஆகிய உலோகங்களை கொள்ள வேண்டி புதுவைக்குச் செல்லும் போது சீர்காழியிலுள்ள ஒரு மடத்தில்  அன்றிரவு தங்கினார்.கவிராயர் தர்மபுரத்தில் கல்வி பயிலும் காலம் தம்முடன் பயின்றவரும் வேளாள மரபினருமான சிதம்பரப்பிள்ளை என்பவரை சந்தித்தார். இருவரும் அளவளாவி இருக்கும் வேளையில் தம்பிரான் தான் இயற்றிய கட்டளை மாலை என்னும் நூலைப் படித்துக் காட்டி கவிராயரிடம் சிறப்புப் பாயிரம் பெற்றார். பின்னர் சீர்காழிக்கு ஒரு பள்ளுப் பிரபந்தம் இயற்றத் தொடக்கி ஒரு பகுதியும் எழுதினார். இங்கிருந்து இந்நூலை முடித்துக் கொண்டு ஊருக்கு போக வேண்டும் என்ற தம்பிரானின் வேண்டுகோளின் படி பிரபந்தத்தை முடித்தார். கவிராயர் அவர்கள் அவருடைய குடும்பத்துடன் சீர்காழியிலேயே இருக்க வேண்டும் என்ற தம்பிரானின் வேண்டுகோளுக்கு இணங்க கவிராயர் சீர்காழியிலேயே வாழ்ந்தார். அன்று முதல் அவருக்கு சீர்காழி அருணாசலக்கவிராயர் என்னும் பெயர் வழங்கலாயிற்று.

            கவிராயர் அங்கே வாழ்ந்து வரும் காலங்களில் தமிழ் பாடல்கள், நாடகங்கள் பலவும் எழுதினார். அது மட்டுமன்றி 'சீர்காழி தல புராணம்', 'சீர்காழிக் கோவை', 'அனுமார் பிள்ளைத் தமிழ்' முதலிய நூல்களையும் இயற்றினார். இவ்வாறு வாழ்ந்து வரும் போது சீர்காழிக்கு அடுத்து சட்டநாதபுரம் என்னும் சிற்றூரில் வெங்கட்ராமையர், கோதண்டராமையர் என்னும் இரு அந்தணர்கள் இருந்தனர். சிறந்த இசைப்பயிற்சியுடைய இருவரும் கவிராயரிடம் வந்து சில சிறு தமிழ்ப் பிரபந்தகளை முறையாக கற்றும், பின்பு கம்பராமாயணம் பாடக் கேட்டும் வந்தனர். இவர்களின் வேண்டுகோளிற்கிணங்கவும் தம்  இசையறிவு படைத்த மாணவர்களால் இசைப்பாடல்களாக எங்கும் பாடிப் பரவலாம் என்ற எண்ணத்தாலும் கம்பராமாயணத்தை கீர்த்தனை வடிவில் அமைத்தார். அந்நூலுக்கு 'இராம நாடக கீர்த்தனை' எனப் பெயருமிட்டார்.இந்நூல் எல்லோராலும் வரவேற்கப்பட்டமைக்கு காரணம் எளிய இனிய தமிழ் சொற்களாலும், வழக்கிலுள்ள சொற்களாலும் இசை நாடகங்களுக்கு ஏற்ற முறையில் எழுதப்பட்டிருந்தமையும் கம்பராமாயணக் கருத்துக்களும் சொற்பொழிவுகளும் எங்கும் மிளிரும்படி ஆக்கம் பெற்றிருந்தமையும் ஆகும். நூல் எழுதியதும் கம்பராமாயணம் அரங்கேறிய  திருவரங்கத்திலேயே இந்நூலையும் அரங்கேற்ற வேண்டுமென்று எண்ணி, அங்கு சென்று அரங்கநாத கோவிலில் அதிகாரிகளிடம் தம் எண்ணத்தை தெரிவித்து அனுமதியும் பெற்ற பின் கவிராயர் தனியாக ஒர் இடத்தில் இருந்து அரங்கநாதரை நினைத்து ' ஏன் பள்ளி கொண்டீரையா ஸ்ரீரங்கநாதரே...' எனும் பாடலைப் பாடினார்.

          திருவுளம் உகந்த பெருமான் கவிராயர் கனவில் ஒரு வைணவப் பெரியார் வடிவில் தோன்றி, 'கம்பராமாயணத்தை அரங்கேற்ற வந்த போது நம் சடகோபனைப் பற்றி பாடினாயா?' என்று கேட்டார். 'கம்பர் சடகோபன் மேல் ஒரு அந்தாதி பாடினார். அதன் பின் நூல் அரங்கேறியது. அவ்வாறே நீரும் உம்முடைய நாடகத்தில் நம் பெருமானுடைய தரிசனங்களை பாடினால் உமது நூலும் அரங்கேறும்' என்று கூறினார். இவ்வாறு கோயில் அதிகாரிகள் கனவில் தோன்றி 'கவிராயரை நம் தரிசனங்களைப் பாடுவித்துக் கொண்டு அந்நூலைக் கேளுங்கள்!' என்று கட்டளையிட்டார். பொழுது புலர்ந்ததும் கவிராயரும், கோயில் பணிப்பாளரும் தாம் கண்ட கனவுகள் பொருத்தமுற்றிருப்பதையறிந்து இது திருவுளப் பாங்காகும் எனக் கூறினார்.  கம்பராமாயணம் அரங்கேறிய மண்டபத்தில் பங்குனி அதே நாளில் திருவரங்க முற்றத்தடியார் முன்னிலையில் கவிராயர் நூலும் அரங்கேறியது. கோயில் அதிகாரிகள் பரிசுகள் வழங்கி மரியாதைகள் செய்தனர். அதன் பின் புதுவையில் ஆனந்தரங்கப்பிள்ளையிடம் சென்ற போது அவர் மரியாதை செய்து தம் நண்பரான மணலி முத்துக்கிருஷ்ண முதலியாருக்குத் திருமுகம் கொடுத்தனுப்பினார். கவிராயர் அங்கே சென்ற போது முதலியார் தக்க சபை கூட்டி ராமநாடகம் முழுவதும் பிரசங்கம் செய்ய வழி செய்து கொடுத்தார்கள். இராமர் பட்டாபிசேக நாள் அன்று பரிசுகள் பல வழங்கினர். கவிராயர் தமது திருமணத்துக்குப் பின் தில்லையில் 12 வருடங்கள் வாழ்ந்தார். 60 ஆம் ஆண்டில் நாடகத்தைப் பாடி முடித்தார். கவிராயர் 67 ஆம் ஆண்டு ஆனி மாதம் இறைவனடி எய்தினார். 

No comments:

Post a Comment