Friday, July 22, 2011

கோபாலகிருஷ்ண பாரதியார்

      தஞ்சாவூர் ஜில்லாவிலுள்ள முடிகொண்டான் கிராமத்தில் ராமசாமியாருடைய காலத்தில் 1810 ஆம் ஆண்டு இராமசாமி பாரதிக்குப் புதல்வராக அவதரித்தார். இவர் அந்தண வருணத்தில் வடமா வகுப்பினர். இவருடைய முன்னோர்கள் சங்கீதப் பயிற்சி உடையவர்கள்.

            நைஷ்டிக பிரம்மச்சாரியாகிய கோவிந்த ஜதி என்பவரிடம் யோகம் முதலியனவைகளைப் பயின்று ஆனந்த தாண்டவபுரம் என்னும் ஊருக்கு வந்து அங்கு மிராசுதாரராக இருந்த அண்ண ஐயர் என்பவரால் ஆதரிக்கப்பட்டு வந்தார். அங்கு காலட்சேபம் செய்து பணம் சம்பாதித்தார். சேக்கிழார் எழுதிய  பெரிய புராணத்தில் இருந்து 37 செய்யுள்கள் அடங்கிய நந்தனார் சரித்திரத்தை இவர் ஒரு பெரிய கதையாகச் செய்து 'நந்தனார் கீர்த்தனைகள் ' எனும் ஒரு இசை நாடகத்தையும் எழுதினார். இவர் இந்த சரித்திரத்தில் பல பாத்திரங்களைப் புகுத்தி அழகிய கீர்த்தனைகளாக அமைத்தார். அதன் மூலம் இந்த கதைகள் சங்கீத உலகம் வாசிப்பதற்கு பெறுமதியாக அளித்தார். இந்த இசை நாடகத்தில் பல அழகிய கீர்த்தனைகளும், பல இரு சொல் அலங்காரம், நொண்டிச்சிந்து முதலியனவற்றையும் அமைத்திருக்கிறார்.

            மேலும், இயற்பகைநாயனார் சரித்திரம், காரைக்கால் அம்மையார் சரித்திரம் என்பவற்றையும் இயற்றி பிரசித்தி அடையச் செய்தார். ஞான சிந்து , ஞானக் கும்மி முதலியவற்றையும் இயற்றினார். கோபாலக்கிருஷ்ணம்,  பாலகிருஷ்ணம் என்பது இவரது சிவநாம முத்திரையாகும்.

            தெய்வபக்தி நிறைந்த இவரது வாழ்க்கை மிகவும் கஷ்டமானதாகவே அமைந்தது. வறுமையால் மிகவும் அவதியுற்றார். பட்டினகிருஷ்ணன் பாவதா என்பவரின் மூலமாக இவரது நந்தனார் சரித்திரம் பிரசித்தியடைந்தது. எப்பொழுதாவது எழுதுவதற்கு கருத்துக்கள் தேடின் சிதம்பரம் சென்று வருவது இவரது வழக்கமாகும். ஒருமுறை இராமலிங்க சுவாமிகள் இவரது நந்தனார் சரித்திரத்தைக் கேட்டு இவரைப் பாராட்டினார். இந்தச் சரித்திரம் 1861 ஆம் ஆண்டு ஒரு பிரெஞ்சுக்காரரின் உதவியால் அச்சிடப்பட்டது. இவர் அநேக கீர்த்தனைகள் செய்துள்ளார்.

           கீர்த்தனைகள் மட்டும்தான்  முத்திரையிடுகின்றன. இவர் சில அபூர்வ ராகங்களிலும் கீர்த்தனைகள் இயற்றியுள்ளார். ஒரு சமயம் தியாகராஜசுவமிகள் இவரை நேரில் கண்டு தன் முன் பாடச் சொல்லி கேட்டு அவர் ஆசி வழங்கினதை கோபாலகிருஷ்ண பாரதியார் பெரும் பேறாகக் கருதினார். 'சபாபதி' என்று தொடங்கும் ஆபோகி கீர்த்தனையே தியாகராஜா சுவாமிகள் முன் இவர் பாடிய கீர்த்தனையாகும். 1881 ஆம் ஆண்டு மாசி மாதம் மகா சிவராத்திரி அன்று கோபாலகிருஷ்ணபாரதியார் அவர்கள் விண்ணுலகெய்தினார்.

No comments:

Post a Comment