Wednesday, July 27, 2011

அரங்க தேவஸ் துதி

பரத குல பாக்ய கலிகே 
பாவ ரஸானந்த பரினதாகரே 
ஜக தேக மோகன கலே
ஜய ஜய ரங்காதி தேவதே தேவி  
  

கருத்து : 
                  பரத குலத்திற்கு அதிஷ்டம் தருபவளே பாவம், ரஸம் ஆகியவற்றால் ஏற்படும்  ஆனந்தம் பரிணமித்த உருவம் உடையவளே உலகம் முழுவதும்  கவரத்தக்க ஒரேயொரு கலையாக இருப்பவளே வெற்றி வெற்றி அரங்கத்தின் தேவிக்கு.  

Friday, July 22, 2011

அருணாசலக்கவிராயர்

            சோழ நாட்டிலே மாயூரம் என்ற தலத்தை அடுத்துள்ள தில்லையாடி என்ற ஊரில் வேளாளர் மரபில் பிறந்த நல்லதம்பி என்பவருக்கும், வள்ளியம்மை என்பவருக்கும் 1634 ம் விஜய ஆண்டில் பிறந்தார். 12 ஆவது வயது நிரம்ப முன்னரே தமிழ்ப் பள்ளியில் பயிற்சி பெற வேண்டிய கல்வியைச் செவ்வனே கற்றார். இளமையிலேயே தாய் தந்தையரை இழந்தார். எனவே மேற்கொண்டு தமது கல்வியை வளர்த்துக்கொள்ளும் அவாவினால் தாம் பிறந்த ஊருக்கு சமீபமான தர்மபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள சைவ மடத்தில் வளர்ந்து தென்மொழி, வடமொழிகளில் சிறந்து விளங்கினார். சைவசீலர்களாக விளங்கிய தம்பிரர்கள் பலரிடம் தமிழ் இலக்கண இலக்கியங்களும் கற்றுச் சிறந்து விளங்கினார். 

           தர்மபுரத்து பண்டார சந்நியாசியாகிய தர்மப்புரம் பண்டாரம் அம்பலவாணக் கவிராயர் இவருக்கு தமிழ் அறிவு புகட்டிய நல்லாசிரியர். இவருடைய மதிநுட்பத்தையும்,அறிவுச்செல்வத்தையும் மெச்சி பண்டார சந்நியாசிகள் இவரை ஆதீனத்தின் தலைமைப் பொறுப்பை வழங்க முன்வந்தர். ஆனால் இவர் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. 12 ஆண்டுகள் மடத்தில் இருந்து கல்வி கற்ற பின்னர் அங்கிருந்து தமது ஊர் வந்து சேர்ந்து மென்மேலும் தமிழ் மொழியிலுள்ள அரிய நூல்களை இடையறாது படித்து தம் புலைமையை விருத்தி செய்துகொண்டு தம்முடைய முப்பதாவது வயதில் தம் உறவினர் குடும்பத்தில் சீர் மங்கையை மணந்து இல்லறம் நடாத்தத் தொடங்கினார். காசுக்கடை வைத்து அதனால் வாழ்க்கைக்கு வேண்டிய பொருட்களையும் ஈட்டி வைத்தார்.

           இவர் படித்த நாட்களில் கம்பர் இயற்றிய  ராமாயணத்தை அழுத்தம் திருத்தமாகப் படித்தும், பலருக்கும் கற்பித்தும் பொது மன்றங்கள் பலவற்றில் எல்லோரும் கேட்டு மகிழும் படி இன்னிசையோடு பயிற்றியும் வந்தார். இவ்வாறு வாழ்க்கை நடத்திவருங்கால், தம் வணிக நிமித்தம் பொன், வெள்ளி ஆகிய உலோகங்களை கொள்ள வேண்டி புதுவைக்குச் செல்லும் போது சீர்காழியிலுள்ள ஒரு மடத்தில்  அன்றிரவு தங்கினார்.கவிராயர் தர்மபுரத்தில் கல்வி பயிலும் காலம் தம்முடன் பயின்றவரும் வேளாள மரபினருமான சிதம்பரப்பிள்ளை என்பவரை சந்தித்தார். இருவரும் அளவளாவி இருக்கும் வேளையில் தம்பிரான் தான் இயற்றிய கட்டளை மாலை என்னும் நூலைப் படித்துக் காட்டி கவிராயரிடம் சிறப்புப் பாயிரம் பெற்றார். பின்னர் சீர்காழிக்கு ஒரு பள்ளுப் பிரபந்தம் இயற்றத் தொடக்கி ஒரு பகுதியும் எழுதினார். இங்கிருந்து இந்நூலை முடித்துக் கொண்டு ஊருக்கு போக வேண்டும் என்ற தம்பிரானின் வேண்டுகோளின் படி பிரபந்தத்தை முடித்தார். கவிராயர் அவர்கள் அவருடைய குடும்பத்துடன் சீர்காழியிலேயே இருக்க வேண்டும் என்ற தம்பிரானின் வேண்டுகோளுக்கு இணங்க கவிராயர் சீர்காழியிலேயே வாழ்ந்தார். அன்று முதல் அவருக்கு சீர்காழி அருணாசலக்கவிராயர் என்னும் பெயர் வழங்கலாயிற்று.

            கவிராயர் அங்கே வாழ்ந்து வரும் காலங்களில் தமிழ் பாடல்கள், நாடகங்கள் பலவும் எழுதினார். அது மட்டுமன்றி 'சீர்காழி தல புராணம்', 'சீர்காழிக் கோவை', 'அனுமார் பிள்ளைத் தமிழ்' முதலிய நூல்களையும் இயற்றினார். இவ்வாறு வாழ்ந்து வரும் போது சீர்காழிக்கு அடுத்து சட்டநாதபுரம் என்னும் சிற்றூரில் வெங்கட்ராமையர், கோதண்டராமையர் என்னும் இரு அந்தணர்கள் இருந்தனர். சிறந்த இசைப்பயிற்சியுடைய இருவரும் கவிராயரிடம் வந்து சில சிறு தமிழ்ப் பிரபந்தகளை முறையாக கற்றும், பின்பு கம்பராமாயணம் பாடக் கேட்டும் வந்தனர். இவர்களின் வேண்டுகோளிற்கிணங்கவும் தம்  இசையறிவு படைத்த மாணவர்களால் இசைப்பாடல்களாக எங்கும் பாடிப் பரவலாம் என்ற எண்ணத்தாலும் கம்பராமாயணத்தை கீர்த்தனை வடிவில் அமைத்தார். அந்நூலுக்கு 'இராம நாடக கீர்த்தனை' எனப் பெயருமிட்டார்.இந்நூல் எல்லோராலும் வரவேற்கப்பட்டமைக்கு காரணம் எளிய இனிய தமிழ் சொற்களாலும், வழக்கிலுள்ள சொற்களாலும் இசை நாடகங்களுக்கு ஏற்ற முறையில் எழுதப்பட்டிருந்தமையும் கம்பராமாயணக் கருத்துக்களும் சொற்பொழிவுகளும் எங்கும் மிளிரும்படி ஆக்கம் பெற்றிருந்தமையும் ஆகும். நூல் எழுதியதும் கம்பராமாயணம் அரங்கேறிய  திருவரங்கத்திலேயே இந்நூலையும் அரங்கேற்ற வேண்டுமென்று எண்ணி, அங்கு சென்று அரங்கநாத கோவிலில் அதிகாரிகளிடம் தம் எண்ணத்தை தெரிவித்து அனுமதியும் பெற்ற பின் கவிராயர் தனியாக ஒர் இடத்தில் இருந்து அரங்கநாதரை நினைத்து ' ஏன் பள்ளி கொண்டீரையா ஸ்ரீரங்கநாதரே...' எனும் பாடலைப் பாடினார்.

          திருவுளம் உகந்த பெருமான் கவிராயர் கனவில் ஒரு வைணவப் பெரியார் வடிவில் தோன்றி, 'கம்பராமாயணத்தை அரங்கேற்ற வந்த போது நம் சடகோபனைப் பற்றி பாடினாயா?' என்று கேட்டார். 'கம்பர் சடகோபன் மேல் ஒரு அந்தாதி பாடினார். அதன் பின் நூல் அரங்கேறியது. அவ்வாறே நீரும் உம்முடைய நாடகத்தில் நம் பெருமானுடைய தரிசனங்களை பாடினால் உமது நூலும் அரங்கேறும்' என்று கூறினார். இவ்வாறு கோயில் அதிகாரிகள் கனவில் தோன்றி 'கவிராயரை நம் தரிசனங்களைப் பாடுவித்துக் கொண்டு அந்நூலைக் கேளுங்கள்!' என்று கட்டளையிட்டார். பொழுது புலர்ந்ததும் கவிராயரும், கோயில் பணிப்பாளரும் தாம் கண்ட கனவுகள் பொருத்தமுற்றிருப்பதையறிந்து இது திருவுளப் பாங்காகும் எனக் கூறினார்.  கம்பராமாயணம் அரங்கேறிய மண்டபத்தில் பங்குனி அதே நாளில் திருவரங்க முற்றத்தடியார் முன்னிலையில் கவிராயர் நூலும் அரங்கேறியது. கோயில் அதிகாரிகள் பரிசுகள் வழங்கி மரியாதைகள் செய்தனர். அதன் பின் புதுவையில் ஆனந்தரங்கப்பிள்ளையிடம் சென்ற போது அவர் மரியாதை செய்து தம் நண்பரான மணலி முத்துக்கிருஷ்ண முதலியாருக்குத் திருமுகம் கொடுத்தனுப்பினார். கவிராயர் அங்கே சென்ற போது முதலியார் தக்க சபை கூட்டி ராமநாடகம் முழுவதும் பிரசங்கம் செய்ய வழி செய்து கொடுத்தார்கள். இராமர் பட்டாபிசேக நாள் அன்று பரிசுகள் பல வழங்கினர். கவிராயர் தமது திருமணத்துக்குப் பின் தில்லையில் 12 வருடங்கள் வாழ்ந்தார். 60 ஆம் ஆண்டில் நாடகத்தைப் பாடி முடித்தார். கவிராயர் 67 ஆம் ஆண்டு ஆனி மாதம் இறைவனடி எய்தினார். 

கோபாலகிருஷ்ண பாரதியார்

      தஞ்சாவூர் ஜில்லாவிலுள்ள முடிகொண்டான் கிராமத்தில் ராமசாமியாருடைய காலத்தில் 1810 ஆம் ஆண்டு இராமசாமி பாரதிக்குப் புதல்வராக அவதரித்தார். இவர் அந்தண வருணத்தில் வடமா வகுப்பினர். இவருடைய முன்னோர்கள் சங்கீதப் பயிற்சி உடையவர்கள்.

            நைஷ்டிக பிரம்மச்சாரியாகிய கோவிந்த ஜதி என்பவரிடம் யோகம் முதலியனவைகளைப் பயின்று ஆனந்த தாண்டவபுரம் என்னும் ஊருக்கு வந்து அங்கு மிராசுதாரராக இருந்த அண்ண ஐயர் என்பவரால் ஆதரிக்கப்பட்டு வந்தார். அங்கு காலட்சேபம் செய்து பணம் சம்பாதித்தார். சேக்கிழார் எழுதிய  பெரிய புராணத்தில் இருந்து 37 செய்யுள்கள் அடங்கிய நந்தனார் சரித்திரத்தை இவர் ஒரு பெரிய கதையாகச் செய்து 'நந்தனார் கீர்த்தனைகள் ' எனும் ஒரு இசை நாடகத்தையும் எழுதினார். இவர் இந்த சரித்திரத்தில் பல பாத்திரங்களைப் புகுத்தி அழகிய கீர்த்தனைகளாக அமைத்தார். அதன் மூலம் இந்த கதைகள் சங்கீத உலகம் வாசிப்பதற்கு பெறுமதியாக அளித்தார். இந்த இசை நாடகத்தில் பல அழகிய கீர்த்தனைகளும், பல இரு சொல் அலங்காரம், நொண்டிச்சிந்து முதலியனவற்றையும் அமைத்திருக்கிறார்.

            மேலும், இயற்பகைநாயனார் சரித்திரம், காரைக்கால் அம்மையார் சரித்திரம் என்பவற்றையும் இயற்றி பிரசித்தி அடையச் செய்தார். ஞான சிந்து , ஞானக் கும்மி முதலியவற்றையும் இயற்றினார். கோபாலக்கிருஷ்ணம்,  பாலகிருஷ்ணம் என்பது இவரது சிவநாம முத்திரையாகும்.

            தெய்வபக்தி நிறைந்த இவரது வாழ்க்கை மிகவும் கஷ்டமானதாகவே அமைந்தது. வறுமையால் மிகவும் அவதியுற்றார். பட்டினகிருஷ்ணன் பாவதா என்பவரின் மூலமாக இவரது நந்தனார் சரித்திரம் பிரசித்தியடைந்தது. எப்பொழுதாவது எழுதுவதற்கு கருத்துக்கள் தேடின் சிதம்பரம் சென்று வருவது இவரது வழக்கமாகும். ஒருமுறை இராமலிங்க சுவாமிகள் இவரது நந்தனார் சரித்திரத்தைக் கேட்டு இவரைப் பாராட்டினார். இந்தச் சரித்திரம் 1861 ஆம் ஆண்டு ஒரு பிரெஞ்சுக்காரரின் உதவியால் அச்சிடப்பட்டது. இவர் அநேக கீர்த்தனைகள் செய்துள்ளார்.

           கீர்த்தனைகள் மட்டும்தான்  முத்திரையிடுகின்றன. இவர் சில அபூர்வ ராகங்களிலும் கீர்த்தனைகள் இயற்றியுள்ளார். ஒரு சமயம் தியாகராஜசுவமிகள் இவரை நேரில் கண்டு தன் முன் பாடச் சொல்லி கேட்டு அவர் ஆசி வழங்கினதை கோபாலகிருஷ்ண பாரதியார் பெரும் பேறாகக் கருதினார். 'சபாபதி' என்று தொடங்கும் ஆபோகி கீர்த்தனையே தியாகராஜா சுவாமிகள் முன் இவர் பாடிய கீர்த்தனையாகும். 1881 ஆம் ஆண்டு மாசி மாதம் மகா சிவராத்திரி அன்று கோபாலகிருஷ்ணபாரதியார் அவர்கள் விண்ணுலகெய்தினார்.

Thursday, July 21, 2011

தஞ்சாவூர் பொன்னையாப்பிள்ளை

            இவர் சர்வஜித்து 1888ம் ஆண்டு தை மாதம் 2ம் திகதி பந்தனை நல்லூரில் பிறந்தார். தான் பிறந்த ஊரிலே கல்வி கற்றார். அக்காலத்திலேயே சங்கீதம், நாட்டியம், மிருதங்கம் ஆகியவற்றில் மிகுந்த தேர்ச்சி பெற்றார். தெலுங்கு, தமிழ் பாஷைகளை கற்றுத் தேர்ச்சியடைந்தார். 

            பொன்னையாப்பிள்ளைக்கு சங்கீதத்தில் உள்ள திறமையினால் சென்னையில் சிறந்த சங்கீத வித்துவான்கள்  பலர் முன்பாடிப் புகழ் பெற்றார். நாட்டியம் சொல்லிக் கொடுப்பதிலும் தேர்ச்சி பெற்றார். நாட்டியக் கச்சேரியில் இவரது சங்கீதத் திறமையைக் கேட்டவர்கள் இவர் சங்கீதக் கச்சேரி செய்வதற்கே சிறந்தவர் எனக் கூறினார்கள்.

            பெரும்பாலும் நாட்டியக் கச்சேரிகள் நடைபெறுவதோடு இவரின் இசைக்கச்சேரியும் நடைபெற்று வந்தது இவரின் தந்தையாரின் முயற்ச்சியாலும், மற்றும் பல வித்துவான்களின் கூட்டுறவாலும், ஞானத்தாலும் இவர் உயர்வு அடைந்து வந்தார். நாட்டியக் கலைக்குவேண்டிய கிரகங்களை நன்கு கற்று பாரத, சங்கீத சாஸ்திரங்களிலும் அதிக பயிற்சி பெற்றுக்கொண்டார்.இவரது தந்தையாரிடம் நாட்டியம், சங்கீதம், மிருதங்கம் கற்க வந்த மாணவ, மாணவிகளுக்கு தாமே பாடங்களைப் போதித்து வந்தார். இவருக்கு ராமநாதபுர சமஸ்தானம், திருவனந்தபுரம்,புதுக்கோட்டை சமஸ்தானங்களிலும் ஆதரவு நாளுக்கு நாள் ஓங்கி வளர்ந்தது. பல சங்கீத வித்துவான்களும் வயலின் வித்துவான்களும் இவரிடம் வந்து சந்தேகங்களையும், விஷயங்களையும் கேட்டுத் தெரிந்து கொண்டார்கள். இசைத் தொண்டு ஆற்றிவரும் பரம்பரை ஆதலால் பிள்ளை அவர்களும் அத்தொண்டு செய்து வந்தார். 

            சித்திரைத் திருவிழா அன்று நடைபெறும் குறவஞ்சி நாடகத்தைப் புது முறையில் சிறப்பாக நடாத்திக் காட்டினார். தந்தைக்கு முன் மாணவ, மாணவிகளுக்குத் தாமே சங்கீதம், நாட்டியம், மிருதங்கம் சொல்லிக் கொடுத்தார். இப்பொழுது பரதநாட்டிய ஆசிரியர்களாக விளங்குபவர்களில் பலர் இவரது மாணவர்களே. அண்ணாமலை இசைக்கல்லூரிக்கு இவரே ஆரம்பத்தில் ஆசிரியராக நியமிக்கப்பட்டார். அநேக மாணவர்களுக்கு இசை இன்பத்தை ஊட்டி சிறந்த வித்துவான்களாக ஆக்கினார். மிருதங்க வகுப்பைத் தாமே நடத்தினார். அச்சமயத்தில் இவர் ஜதீஸ்வரம், தாளவர்ணம், தமிழில் தில்லானாக்கள் கீர்த்தனங்கள் இயற்றித் தம் முன்னோரின் ஸ்வரஜதிகள், தாளவர்ணங்கள், கீர்த்தனங்கள் நாடெங்கிலும் பரவும்படி கற்பித்துவந்தார். சென்னை சர்வகலாசாலையில் முக்கிய அங்கத்தவராக இருந்து வந்தார். தமது விடுமுறையின் போது யாழ்ப்பாணம் சங்கீதப் பரீட்சைகள் நடாத்திப் பலருக்கு மதிப்பும் பத்திரமும் கொடுத்துள்ளார். அண்ணாமலைப் பல்கலைக்கலகத்திற்கு வேண்டிய புத்தகங்களையும் எழுதியுள்ளார்.  இசை இலக்கணப் புத்தகம் ஒன்றும் எழுதிக் கற்பித்தார்.

            1932ல் சென்னை வித்துவசபையினரால் இவருக்கு சங்கீத கலாநிதிப் பட்டமும் கொடுக்கப்பட்டது. சென்னை சர்வகலாசாலையில் ஆசிரியர் குழுவுக்கு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் சென்னை சர்வகலாசாலையில் வேலை செய்யும் போது தம் முன்னோர்களின் சாகித்தியங்களை தொகுத்து ஸ்வர தாளக் குறிப்புடன் விபரமாக 'தஞ்சைப் பெருவுடையான் பேரிசை' என்ற புத்தகத்தை வெளியிட்டார். அகில இந்திய கவி மாநாட்டுக்கு இசைப்பகுதி அங்கத்தவராகச் சென்று அம்மாநாட்டை நடத்தினார்.

            அண்ணாமலை இசைக்கல்லூரியில் பாடங்கள் முழுவதையும் தமிழில் இசைப்பாடல்கலாகவே நடாத்த வேண்டுமென்று இராஜ சேர் அண்ணாமலைச் செட்டியார் அவர்களின் விருப்பத்துக்கு இணங்க  ஆரம்ப பாடல்களுக்கு வேண்டிய தமிழ்ப் பாடல்களை செய்துகொடுத்தார். இவர் சென்னை, திருச்சி அகில இந்திய ரேடியோ நிலையங்களில் கச்சேரி செய்து இசை ஆராய்ச்சி உரையும் நிகழ்த்தினார்.

            அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ் இசைக் குழுவுக்கு முக்கிய  அங்கத்தவராகவும் பரீட்சாதிகாரியாகவும்  சென்னை அடையாற்றில்  நடனப் பள்ளிக்கூடத்த்திற்குப் பரீட்சாதிகாரியாகவும் இருந்தார். இவர் இயற்றிய பாடல்களில் அஞ்சனா கீதம், இலட்சண கீதம், பிரபந்தம், கீர்த்தனம், தில்லானா, இராகமாலிகை,  பதவர்ணம் முதலியவற்றில் இவரின் சங்கீத  புலைமை புலனாகிறது. இவர் தமது கடைசிக் காலத்தில் அண்ணாமலை இசைக் கல்லூரிக்கு வேண்டிய  பாடல்களை செய்து கொடுத்து இறுதியாக உடல்நலக் குறைவால் தமது 57 வது வயதில் 1945 ஆம் ஆண்டு ஆனி மாதம் 30 ஆம் திகதி தஞ்சைப் பெருவுடையான் திருவடியை அடைந்தார்.    

Monday, July 18, 2011

கோர்வை

         பல அடவுகளின் சேர்க்கை கோர்வை எனப்படும். நாட்டியத்தில் வெவ்வேறு அமைப்புக்களைக் கொண்டு ஒரு குறிப்பிட்ட தாளத்தில் அமைய சீரான சொற்கட்டுக்களைக் கோர்வைகளைக் கொண்ட மாலை கோர்வை எனப்படும். இது அங்ககாரம் அல்லது தொடுக்கப்பட்ட மாலை என அழைக்கப்படும். மாலையான இந்த கோர்வையானது ஒழுங்குமுறையில் அழகாக தொடுக்கப்பட்டுள்ளது. மண்டலங்கள், முத்திரைகள், பாதபேதங்கள் இங்கு உபயோகப்படுத்தப்படுகின்றன. பாடலின் கதிக்கேற்ப இக்கோர்வை அமைக்கப்பட்டு படிப்படியாக துரித லயத்தில் முடிவடையலாம். இக்கோர்வைகள் வன்மையும், மென்மையும் ஆன ஹஸ்த, பாத அசைவுகள் கலந்த அல்லது மாறி மாறித் தொடுக்கப்படும் ஒரு சிறு தீர்மானத்தில் முத்தாயிக்கப்பட்டு ஆடப்படும். முடிவடையும்போது ஒன்று, மூன்று, ஐந்து எண்ணிக்கைகளில் இது ததிங்கிணதோம் அல்லது கிடதகதரிகிடதொம் என்னும் அடவுகளில் முடிவடையும்