Thursday, June 30, 2011

அடவு

            நடனத்தின் அடவு என்பது ஒரு சிறு ஆடல் துனுக்காகும். பல மண்டலங்களும், முத்திரைகளும் இணைந்து வருவது அடவு எனப்படும். இந்த ஆடல் துனுக்கானது ஒரு தாளத்தின் ஒரு காலடியையும், ஓர் உடல் நிலையையும், ஆடல் முத்திரைகள் கொண்ட கையசைவு ஒன்றையும் சேர்த்து பொருந்தியதாக இருக்கும். அதே போல ஓரிடத்தில் இருந்து இன்னோர் இடத்தை நடிகை ஆட்டத்தின் மூலம் அடைவதினால் , இதனை மொழி இலக்கணம் கற்ற சில அறிஞர்கள் இன்று அடைவு என்று திருத்தி எழுதி வருகின்றனர். இது "அடி" என்ற பொருள் கொண்ட ஆடு, அடுக்கு, அதுவு என்ற தெலுங்குச் சொற்களிலிருந்து வந்துள்ளது. 

            இவ்வாறு பல துணுக்குகள் கோர்வையைச் சேர்ந்தே ஒரு ஆடல் வரிசையாகும். பல ஆடல் வரிசையைக் கொண்டது குழு நடனமாகும். இந்த துணுக்குகளில் அடிகளைப் பயன்படுத்துவதில் பல வகைகள் காணப்படுகின்றன.அடிகளைத் தரை மீது சமமாய்த் தட்டுவது தட்டடவு  என்றும், கால நீட்டித் தட்டுவது நாட்டடவு என்றும், ஐந்து விரல் கொண்ட பதத்தின் முன் பகுதியை குதித்து மெட்டுவது மெட்டடைவு என்றும் அடிப்படையில் மூன்று வகைப்படும். இவைகளில் இரண்டு அடைவுகள் சேரும் போது தட்டுமெட்டு, மெட்டிநாட்டு, மெட்டித்தட்டு, நாட்டித்தட்டு, நாட்டிமெட்டுஎன ஆறு அடைவுப் பிரிவுகள் உண்டு. இதனைவிட மண்டியடவு, சறுக்கல் அடவு, கத்தரி அடவு, கிடதக தரிகிட தொம், ததின்கினதொம் முதலியனவும் அடங்கும். 

முத்திரைகள்

           முத்திரை என்பது பொருளைக் குறிப்பதற்காக விரல்களால் குறிக்கப்படும் அமைப்பு. அதாவது ஒரு பொருளில் தோற்றம், உருவம், குறி என்பவற்றைக் கைகளினால் விளக்குவதே முத்திரையாகும். இம்முத்திரைகளின் பயன்பாடு நடனத்தில் முக்கியமான இடத்தைப் பெறுகின்றது. இதனால் இம்முத்திரைகள் "ஹஸ்தாபிநயம்" என்று அழைக்கப்படுகின்றது. பாரத முனிவர் காலத்த்ற்கு முன்னாலேயே இக்கலை நன்கு வளர்ச்சியடைந்திருக்க வேண்டும். வார்த்தைகள் எதுவும் பேசாமலே கைகளிலுள்ள விரல்களின் பல்வேறு நிலைகளாலும், அசைவுகளாலும் பொருள்பட அபிநயிப்பது இக்கலையாகும். நடனத்தில் பிரயோகிக்கும் கைகளை சமஸ்கிருதத்தில் ஹஸ்தங்கள் என்று அழைப்பர். தமிழில் "முத்திரைகள்" என்று அழைக்கப்படும். இவ் ஹஸ்தங்களை இரண்டாகப் பாகுபாடு செய்யலாம். 
அவையாவன 
  1. அபிநய ஹஸ்தம்.
  2. நிருத்த ஹஸ்தம்.
இவ் அபிநய ஹஸ்தம் மேலும் இரண்டாகப் பாகுபாடு செய்யலாம்.
  1. ஒற்றைக்கை அல்லது அஸம்யுத ஹஸ்தம்.
  2. இரட்டைக்கை அல்லது ஸம்யுத ஹஸ்தம்.
           இவற்றை முறையே இணைந்த கை, இணையாத கை எனவும் கூறலாம். அபிநயக்கைகள் கருத்துக்களைப் புலப்படுத்தவும் நிருத்தக் கைகள் நிருத்தத்திற்கும் பயன்படும். பாரத சாஸ்திரம் ஹஸ்தங்கள் பற்றி கூறும் போது    
அஸம்யுத ஹஸ்தங்கள் இருபத்து எட்டு  எனவும்,  ஸம்யுத ஹஸ்தங்கள் இருபத்து நான்கு எனவும் கூறுகிறது. முத்திரைகளின் உபயோகமே விநியோகங்களாகும். 

Wednesday, June 29, 2011

நமஸ்காரம்

            பாரத தேசத்தில் தோற்றம் பெற்றதும், மிகவும் புனிதமானதுமான நாட்டியக்கலை என்று மக்கள் மனதில் தெய்வீக கலை என்ற அந்தஸ்தைப் பெற்றதோ அன்றே தட்டிக் கும்பிடும் வழக்கமும் ஆரம்பமாயிற்று. அதாவது தட்டிக்கும்பிடுதல் என்ற வழக்கம் மிகவும் பழைமை வாய்ந்ததாகும். இத்தட்டிக்கும்பிடும் செயல் நமஸ்காரம் எனவும் கூறப்படும். இந்நமஸ்காரம்   இரு வகைப்படும்.சின்ன நமஸ்காரம் , பெரிய நமஸ்காரம். பொதுவாக நாட்டியப் பயிற்சியின் பொது செய்யப்படும் நமஸ்காரம் சின்ன நமஸ்காரம் ஆகும். நாட்டியக் கச்சேரியின் பொது இவ்விரு நமஸ்காரமும் செய்யப்படும்.

           இந் நமஸ்காரத்தினை நடனமாடும் ஒருவர் நடனமாடுவதற்கு முன்னரும் நடனமாடிய பின்னரும் செய்தல் வேண்டும். நமஸ்காரத்தின் போது  பூமாதேவியை வழிபடுவதாகக் கூறப்படும். இந் நமஸ்காரத்தின் போது கடஹாமுகம், சிகரம், சதுரம் என்னும் ஒற்றைக்கை முத்திரைகள் மூன்றும், அஞ்சலி எனப்படும் இரட்டைக்கை முத்திரை ஒன்றும் மொத்தம் நான்கு முத்திரைகள் பிரயோகிக்கப்படுகின்றன. 

          நமஸ்காரத்தின் போது முதலில் சமநிலையில் நின்றவாறு, கைகளை மார்பின் முன்பு கடஹாமுக முத்திரையில் வைத்துக் கால்களால் வலது, இடது என்ற ஒழுங்கில் பூமியில் இருதடவை தட்ட வேண்டும். பின் இரு கைகளிலும் சிகர ஹஸ்தத்தை நீட்டிச் சுற்ற வேண்டும். பின் முழுமண்டியில் அமர்ந்து கைகளில் சதுர முத்திரை பிடித்து பூமியைத் தொட்டு கண்ணில் ஒற்றி அஞ்சலி ஹஸ்தத்தினால் வழிபடுதல் வேண்டும்.

நமஸ்காரத்தின் உட்பொருள்
       
           அன்னை பூமாதேவியிடம் அவள் மீது மிதித்து தட்டுவதற்கு மன்னிப்பு வேண்டுவது அதன் பொருள். அஞ்சலி கையை தலைக்கு மேல் உயர்த்தி கடவுளுக்கும், புருவமத்தியிலிருந்து குருவுக்கும், மார்புக்கு எதிரிலிருந்து சபையினருக்கும் அஞ்சலி செலுத்துவது மரபு. இவை தவிர வகுப்பில் கட்டிக் குச்சியையும் மேடையில் கைத்தாலத்தையும் தொட்டு வணங்குவதற்கும் உட்பொருள் உண்டு. அண்டசராசரமும் இயங்கிவருவது ஒரு சீரிய தாள அளவின் அடிப்படையில்தான். சூரிய உதயமும் , அஸ்தமனமும் ஒரு கால அளவைக் கொண்டு தானே நிகழ்ந்து கொண்டிருக்கிறது. தாளம் என்பது காலத்தையும் அதன் பிரிவுகளையும்தான் குறிக்கும். இவ்வகிலாண்ட வலயத்தோடு ஆடுபவலும் மனம் ஒருமித்து சற்று தியானித்து கைத்தாளத்திற்கு வணக்கம் செலுத்த வேண்டும். தாளக் கருவியாகிய மிருதங்கத்திர்க்கும் வணக்கம் செலுத்தல் மரபு. நாம் அன்றாடம் ஈடுபடும் செயல்கள் யாவுமே பரம்பொருளுக்கு செலுத்தும் வணக்கம் அவ்வழியில் செய்யும் தொழிலே தெய்வம் என்றுணர்ந்து கருத்தொருமித்து செயல்படுவதே தட்டிக் கும்பிடுவதன் உட்கருத்து.          








Tuesday, June 28, 2011

தில்லானா

            ஒரு சம்பிரதாய நடனக் கச்சேரியில் நிருத்த உருப்படிகளில் இறுதியாக ஆடப்படும் உருப்படி தில்லானாவாகும். அதாவது மங்களத்தின் முன் ஆடப்படும். இத்திள்ளான நாத்துருதீம், தனதிரனா, தம், தத்தீம் போன்ற சொற்கட்டுக்களை மையமாகக் கொண்டு இயற்றப்பட்ட உருப்படியாகும். இது மத்திம காலத்தில் அமைக்கப்பட்டிருக்கும். இசை, நடனம் ஆகிய இரண்டு கச்சேரிகளுக்கும் இது பொதுவானதாகும். இதன் அங்கங்கள் பல்லவி, அனுபல்லவி என்பவற்றைக் கொண்டிருக்கும். சில தில்லானாக்கள் பல்லவி, சரணம் என்பவற்றைக் கொண்டிருக்கும். சரணத்தில் இரண்டுவகை சாகித்தியம் காணப்படும். பாடும் பொது இதன் பல்லவியினை பலமுறை பாடுவார். இதற்க்கு தாள வின்யாஸ  முறையில் பலவிதமான அடவு ஜாதிகள் கோர்வைகளாக ஆடப்படும்.

            தில்லானாவின் மூலம் நடனமாடுபவரின் தாள, லய ஞானத்தினை அறிந்து கொள்ளமுடிகின்றது. இத்தில்லானாவை "திரிதில்லானா" எனவும் அழைப்பார். இதன் தாது விறுவிறுப்புடன் காணப்படும். தில்லானா என்னும் உருப்படியை உருவாக்கியவர் மகா வைத்தியநாத ஐயர், மைசூர் சதாசிவராவ், பட்டணம் சுப்பிரமணிய ஐயர், சுவாதித்திருநாள் என்போர் குறிப்பிடத்தக்கவர் ஆவார்.   

Friday, June 24, 2011

பதம்

            கடினமான ஜதிகளைக் கொண்ட வர்ணத்தை நீண்ட நேரம் ஆடிய பிறகு சாவதான முறையில் அபிநயத்திற்கு மட்டும் முக்கியத்துவம் அளித்து சில பதங்களை ஆடும் வழக்கம் இருந்துவருகின்றது. பதம் என்ற சொல் பொதுவாக வார்த்தைகளைக் குறிப்பிடும் பதம், பக்திப் பாடல் என்ற பொருளில் வழங்கிவந்திருந்தாலும், தஞ்சையை ஆண்ட விஜயராகவ நாயக மன்னன் காலத்திலிருந்து சிருங்கார ரஸப் பாடல் என்ற பொருளில் உபயோகிக்கப்படுகிறது என்று சிலர் கருதுவர். தாளப்பாக்கம் அன்னமாச்சாரியார் இயற்றிய சிருங்கார சங்கீர்த்தனங்களில் மதுர பக்தியைக் கையாண்டார். இவற்றைத் தழுவி  சேத்ரக்ஞர் பல அருமையான பதங்களை தெலுங்கு மொழியில் இயற்றினார். அவர் காலம் தொட்டு பதம் என்பதற்கு ஒரு தனி பாணியே ஏற்பட்டுவிட்டது. தலைவன் தலைவி உறவின் அடிப்படையில் 4500 பதங்களை இவர் இயற்றியதாக கூறப்படுகிறது. பானுதத்தரின் சிருங்கார ரசமஞ்சரி, மற்றும் பெத்த பெருமாள்ராயரின் சிருங்கார தண்டகம் போன்ற நூல்களில் காணப்படும் பலதரப்பட்ட தலைவன் தலைவி குணச்சித்திர இலக்கணங்களுக்கு பதங்கள் செயல்முறைப் பாடங்களாக விளங்குகின்றன.

             பதம் எனும் இசைப்பாடலின்  அமைப்பில்  பொதுவாக ஒரு பல்லவி, ஒரு அனுபல்லவி, ஒன்றோ அல்லது அதற்க்கு மேற்பட்ட சரணங்களோ உறுப்புக்களாக விளங்குகின்றன. அதன் இசையும் அனேகமாக சௌக காலத்திலோ அல்லது மத்யம காலத்திலோ அமைந்திருக்கும். பதங்களின் பொருள் அபிநயத்திற்கு வாய்ப்பளிப்பதாக அமைந்திருக்கும். பதங்களை அபிநயிப்பது எத்தனை உணர்ச்சிபூர்வமாக இருக்கவேண்டுமோ, அதே போல பாடுவதும் அமைந்திருக்கவேண்டும். பதத்தின் இசையமைப்பு அதில் காணும் கருத்துக்கு ஏற்றவண்ணம் அமைந்திருக்கும். கீழ்க்காலத்தில் பாடப்படவேண்டிய சில பதங்களை கையாளுவதை இசைத் துறையின் வல்லுனர்களும் பெரிய சாதனையாகக் கருதுவர். ஒவ்வொரு பதமும் அந்தந்த ராகத்தின் பல்வேறு அம்சம்களையும் பிழிந்தெடுத்துத் தரும் சாரமாக அமைந்திருக்கும்.

             பதங்களை நாட்டியதர்மி லோகதர்மி ஆகிய இரு வழக்குகளிலும் அபிநயிக்கலாம். இது அவரவர் அவைக்கு ஏற்ற வண்ணம் அமைத்துக் கொள்வது வழக்கம். அபிநயத்தின் சிறப்பம்சங்கள் யாவும் அனுபவம் மிக்க கலைஞர் பதம் ஆடுகையில் தானாகவே பரிமளித்து வருகிறது. ஒவ்வொரு பதமும் ஆடப்படும் பொழுது அந்தப்பதம் குறிக்கும் நாயகன் அல்லது நாயகி அல்லது சகியின் குணச்சித்திரம் வயது, சமூகத்தில்நிலை, சூழ்நிலை போன்ற பல கருத்துக்களைத் தெளிவாக புரிந்துகொண்ட முறையாக அபிநயிக்க வேண்டும். இன்னும் சொல்லப்போனால் ஒவ்வொரு பதத்திற்கும் பின்னால் ஒவ்வொரு சிறிய நாடகம் அடங்கி இருக்கும். ஆகவே பதத்தில் காணப்படும் பதங்களின் நேரான பொருளைத் தவிர அவற்றுள் அடங்கிய உட்கருத்துக்களையும் ஊகிக்கக் கூடிய கருத்துக்களையும் விரிவாக அபிநயிக்க பதத்தில் வாய்ப்புண்டு. இவ்வாறு அபிநயிப்பதற்கு சஞ்சாரி பாவம் என்று பொருள்.