Showing posts with label நாட்டியாரம்பம். Show all posts
Showing posts with label நாட்டியாரம்பம். Show all posts

Thursday, July 28, 2011

த்யானஸ்லோகம்

ஆங்கிகம் புவனம் யஸ்ய வாசிகம் 
ஸர்வ வான்மயம் ஆஹார்யம் சந்திர
தாராதி தம் நுமஹ் சாத்விகம்  
சிவம் 

கருத்து :

                 உலகத்தை உடம்பாகவும் பேசும் பாஷைகள் யாவற்றையும் ஒரே பாஷையாகவும் சந்திர நட்சத்திரங்களை ஆபரணங்களாகவும் அணிந்துள்ள சாந்த ரூபமான சிவனை வணங்குகிறோம். 

Thursday, June 30, 2011

முத்திரைகள்

           முத்திரை என்பது பொருளைக் குறிப்பதற்காக விரல்களால் குறிக்கப்படும் அமைப்பு. அதாவது ஒரு பொருளில் தோற்றம், உருவம், குறி என்பவற்றைக் கைகளினால் விளக்குவதே முத்திரையாகும். இம்முத்திரைகளின் பயன்பாடு நடனத்தில் முக்கியமான இடத்தைப் பெறுகின்றது. இதனால் இம்முத்திரைகள் "ஹஸ்தாபிநயம்" என்று அழைக்கப்படுகின்றது. பாரத முனிவர் காலத்த்ற்கு முன்னாலேயே இக்கலை நன்கு வளர்ச்சியடைந்திருக்க வேண்டும். வார்த்தைகள் எதுவும் பேசாமலே கைகளிலுள்ள விரல்களின் பல்வேறு நிலைகளாலும், அசைவுகளாலும் பொருள்பட அபிநயிப்பது இக்கலையாகும். நடனத்தில் பிரயோகிக்கும் கைகளை சமஸ்கிருதத்தில் ஹஸ்தங்கள் என்று அழைப்பர். தமிழில் "முத்திரைகள்" என்று அழைக்கப்படும். இவ் ஹஸ்தங்களை இரண்டாகப் பாகுபாடு செய்யலாம். 
அவையாவன 
  1. அபிநய ஹஸ்தம்.
  2. நிருத்த ஹஸ்தம்.
இவ் அபிநய ஹஸ்தம் மேலும் இரண்டாகப் பாகுபாடு செய்யலாம்.
  1. ஒற்றைக்கை அல்லது அஸம்யுத ஹஸ்தம்.
  2. இரட்டைக்கை அல்லது ஸம்யுத ஹஸ்தம்.
           இவற்றை முறையே இணைந்த கை, இணையாத கை எனவும் கூறலாம். அபிநயக்கைகள் கருத்துக்களைப் புலப்படுத்தவும் நிருத்தக் கைகள் நிருத்தத்திற்கும் பயன்படும். பாரத சாஸ்திரம் ஹஸ்தங்கள் பற்றி கூறும் போது    
அஸம்யுத ஹஸ்தங்கள் இருபத்து எட்டு  எனவும்,  ஸம்யுத ஹஸ்தங்கள் இருபத்து நான்கு எனவும் கூறுகிறது. முத்திரைகளின் உபயோகமே விநியோகங்களாகும். 

Saturday, June 11, 2011

உலகியல் வரலாறு

            ஆதியில் மனிதன் பூமியில் ஜனனித்ததும் அவனுக்கு ஞானம் உண்டாகவில்லை. அவனும் மற்ற மிருகங்கள் போல் தன் சந்தோசத்தையோ கஷ்டத்தையோ வெளிக்காட்ட கத்திக்கொண்டும், உறுமிக்கொண்டும் பலவிதமாக சத்தமிட்டுக் கொண்டிருந்தான். படிப்படியாக அந்த சத்தத்திலிருந்து பாஷையை உருவாக்கிக் கொண்டான். 

            மனிதனுக்கு சந்தோஷம் வந்தால் சிரிப்பதும், கூத்தாடுவதும், கோபம் மிகுந்தால் பரபரப்புடன் பேசுவதும் இயற்கை. சந்தோஷ மிகுதியால் மனிதன் கூச்சலிட்டான், குதித்துக் கூத்தாடினான். கைகளை கூத்திற்குச் சரியாகக் கொட்டினான். அவன் கூச்சலிட்டது இசையாகவும், கைகளைக் கொட்டியது தாளமாகவும் மாறியது. இசை, கூத்து, தாளம் இம்மூன்றையும் மனிதன் தன்னையறியாமலே கண்டுபிடித்துவிட்டான்.    

புராண வரலாறு

            அறுபத்து நான்கு கலைகளில் ஒன்றாக கருதப்படும் பரதக்கலை, பாரத நாட்டின் தெய்வீகக் கலையாக போற்றப்படுகின்றது. காரணம் ஆரம்ப கால மக்கள் அதிக துயரத்தில் ஆழ்ந்து கிடந்தனர். இந்நிலை மாறி எங்கும் இன்பம் உண்டாகும் வண்ணம், அனைவரும் புரிந்து கொள்ளுமாறு நான்கு வேதங்களில் இருந்து ஒரு பொழுதுபோக்கை உருவாக்குமாறு இந்திரன் பிரம்மாவை வேண்டினார். இதற்கமைய இருக்கு வேதத்தில் இருந்து நாட்டியத்தையும், யசூர் வேதத்திலிருந்து அபிநயத்தையும், சாம வேதத்திலிருந்து இசையையும், அதர்வ வேதத்திலிருந்து ரஸத்தினையும் தொகுத்து ஐந்தாம் வேதமாக நாட்டியக்கலையினை படைத்தார்.  

            பிரம்மா தான் படைத்த நாட்டியக்கலையை முதலில் பாரத முனிவருக்கு கற்பித்தார். இதனைப் பரதர் கந்தர்வர்கள், அப்சரஸ் பெண்களுக்கு கற்றுக் கொடுத்தார். பின்னர் கைலயங்கிரியில் சிவன் முன்னிலையில் இப்பெண்கள் நிருத்தம், நிருத்தியம், நாட்டியம் என்பவற்றை ஆடிக்காட்டினர். இதனைக் கண்டு மகிழ்ந்த சிவன் தான் இயற்றிய நர்த்தனத்தை நினைவு கூர்ந்து தண்டு முனிவரை அழைத்து அதனை பரதருக்கு கற்று கொடுக்கும்படி கூறினார். தண்டு முனிவரால் எடுத்துச் சொல்லப்பட்டமையால் இது 'தாண்டவம்' என பெயர் பெற்றது.  


            பார்வதி தேவி லாஸ்யம் என்னும் நடனத்தினை பாணனின் மகளும், அனுருத்திரனின் மனைவியுமாகிய உசைக்கு கற்றுக்கொடுத்தார். உசை இதனை துவாரகையிலுள்ள இடைச்சேரிப் பெண்களுக்குக் கற்பித்தார். பின் இவர்கள் மூலம் இக்கலை உலகெங்கும் பரவியது. 

அரும் பத விளக்கம்.

           பரதம் என்ற சொல்லில் வரும்............................ 
:- பாவத்தைக் குறிக்கும். இன்பம் துன்பம் ஆகிய உணர்ச்சிகளினால் தாக்கப்படும் போது அங்கங்களில் வெளிக்காட்டப்படும் அசைவுகள் பாவம் எனப்படும்.

:- ராகத்தைக்க் குறிக்கும். ஸ்வரங்களின் சேர்க்கை ராகமாகும். எழு ஸ்வரங்கள் சேர்ந்து 72 தாய் ராகங்கள் உருவாகின்றன.

:- தாளத்தைக் குறிக்கும். இது லயத்தைக் கட்டுப்படுத்தக்கூடியதொன்று. அடிப்படையான தாளம் ஏழு வகைப்படும். அவை பின் 35 தாளங்களாகவும் 175  தாளங்களாகவும் முறையே ஜதி பேதத்தாலும் கதி பேதத்தாலும் மாற்றம் அடைகின்றது. 


Friday, June 10, 2011

பரதம் என்னும் பதம்

            பரதக்கலை பற்றிய ஆராய்ச்சிக்கு முதலில் பரதக்கலையில் செறிந்துள்ள ஆழமான கருத்தினை ஆராய்தல் பொருத்தமானதாகும். இத்தெய்வீகத் திருக்கலையினையே நாம் பல்வேறு நூல்கள், ஏடுகள், குறிப்புகள் என்பவற்றில் பரதம் என குறிப்பிட்டுள்ளதைக் காணக்கூடியதாகவுள்ளது. எனவே 'பரதம்' என்னும் பதம் எவ்வடிப்படை மூலங்களைக் கொண்டு பின்னிப் பிணைந்துள்ளது என்பதனை அறிதல் பொருத்தமானதாகும். பரதக்கலையின் முக்கண்களாக திகழ்வன; பாவம், ராகம், தாளம் என்னும் கலைக்கூறுகளாகும். இம்மூன்று சொற்களிலும் முதல் எழுத்துக்களாக திகழ்வன ப,ர,த என்னும் எழுத்துக்களாகும். அதே மூன்று சொற்களிலும் இறுதி எழுத்தாக திகழ்வது "ம்" என்னும் எழுத்தாகும். இதுவே இறுதியும், பொதுவானதுமான எழுத்தாகும். எனவே மூன்று சொற்களின் முதல் எழுத்துக்களையும், அதே மூன்று சொற்களின் இறுதி எழுத்தாகிய "ம்" எனும் எழுத்தும் சேர்த்து 'பரதம்' என்னும் பதம் புனையப்பட்டுள்ளது. 

            பழந்தமிழர் வரலாற்றுக் குறிப்புகளில் தமிழ் மக்கள் இயல், இசை, நாடகம் ஆகிய கலைகளில் சிறப்பிடம் பெற்று விளங்கினர் என்பதற்கான பல ஆதாரங்களை கலைகளில் இன்றும் நாம் காண்கிறோம். பல்வேறு காலங்களாகப் போற்றி பேணி மெருகூட்டி வளர்க்கப்பட்டு வந்த தெய்வீகத் திருக்கலையான  நாட்டியக்கலையானது, பிற்காலத்தில் துரதிஷ்டவசமாக சமூக சீரழிவுகளுக்கு உட்படுத்தப்பட்டு, காலச்சக்கரத்தில் சிக்குண்டு, இழிவு நிலைக்கு தள்ளப்பட்டு, உதாசீனம் செய்யப்பட்டது, வருத்தத்துக்குரிய விடயமேயாகும். குறிப்பாக சென்ற நூற்றாண்டின் முற்பகுதியிலும், 19ம் நூற்றாண்டின் இறுதியிலும், இந்நாட்டியக்கலையின் மகத்துவத்தையும், தெய்வீக கலையம்சத்தையும் அறியாத மக்கள் அதனை உதாசீனம் செய்தனர். எனினும் இன்று எமது நாட்டியக்கலையின் ஆராய்ச்சியானது சில பல தவிர்க்கமுடியாத வெற்றிடங்கள், அடிப்படைச் சுலோகத்தின் மீது கொண்ட ஊகங்கள், முரண்பாடுகள் என்பவற்றுடன் காணப்படினும் அதன் தெய்வீகப்பலமும், தெய்வீக சக்தியும் இன்றுவரை அதனை நிலைகொள்ளச் செய்துவிட்டது.  
            இன்றைய நாட்டியக்கலை சம்பந்தமான ஆராய்ச்சிக்கு தமிழில் நமக்கு கிடைத்துள்ள அரிய பண்டைய நூல்கள் சிலப்பதிகாரமும், அடியார்க்கு நல்லாரின் சிலப்பதிகார உரையும் சிறப்பிடம் பெறுகின்றன. இது தவிர, நாட்டியத்தில் சில வடமொழி மொழிபெயர்ப்புகளும், சிறந்த சேவையாற்றி வருகின்றன. இவை பெரும்பாலும் வடமொழியிலுள்ள சுலோகங்களின் நேரடித் தமிழ் மொழிபெயர்ப்புக்கள் ஆகும். டாக்டர். உ. வே. சாமிநாத ஐயர் தமிழ் இலக்கியத்துறைக்கு மட்டுமன்றி தமிழ் கலையுலகத்திட்கும் சிறந்த தொண்டாற்றியுள்ளார். உதாரணமாக வடமொழியில் இயற்றப்பட்ட அபிநயத்தர்ப்பணம் நந்திகேஸ்வரரால் இயற்றப்பட்டது. இதன் தமிழ் மொழிபெயர்ப்பு வீரராகவையன் என்பவரால் மேற்கொள்ளப்பட்டதாக வரலாற்றுக் குறிப்பொன்று சாட்சி பகிர்கின்றது. டாக்டர். உ. வே. சாமிநாத ஐயரின்தொகுப்பில் இந்நூலின் காகிதச் சுவடி ஒன்று அடக்கப்பட்டிருந்தது என அறியப்படுகின்றது. 
           
               இன்றைய நாட்டியக்கலை ஆராய்ச்சிக்கு தென்னிந்திய கோயிற் சிற்பங்கள், அவற்றுக்கு கீழ் எழுதப்பட்ட சுலோகங்கள், கோயிற் கோபுரங்கள், கோயில்களில் வரையப்பட்டுள்ள ஓவியங்கள், சில கோவிற் கல்வெட்டுக்கள் என்பன அதி முக்கிய பங்கினை வகிக்கின்றன. மேலும் அடிப்படை உண்மைகளும், அதன் தெய்வீகக் கோட்பாடுகள் என்பனவும், குருகுலங்கள் மூலமாகவும், வாய்மொழி மூலமாகவும் பாதுகாக்கப்பட்டும், வளர்க்கப்பட்டும் வந்தன.