இவர் சர்வஜித்து 1888ம் ஆண்டு தை மாதம் 2ம் திகதி பந்தனை நல்லூரில் பிறந்தார். தான் பிறந்த ஊரிலே கல்வி கற்றார். அக்காலத்திலேயே சங்கீதம், நாட்டியம், மிருதங்கம் ஆகியவற்றில் மிகுந்த தேர்ச்சி பெற்றார். தெலுங்கு, தமிழ் பாஷைகளை கற்றுத் தேர்ச்சியடைந்தார்.
பொன்னையாப்பிள்ளைக்கு சங்கீதத்தில் உள்ள திறமையினால் சென்னையில் சிறந்த சங்கீத வித்துவான்கள் பலர் முன்பாடிப் புகழ் பெற்றார். நாட்டியம் சொல்லிக் கொடுப்பதிலும் தேர்ச்சி பெற்றார். நாட்டியக் கச்சேரியில் இவரது சங்கீதத் திறமையைக் கேட்டவர்கள் இவர் சங்கீதக் கச்சேரி செய்வதற்கே சிறந்தவர் எனக் கூறினார்கள்.
பெரும்பாலும் நாட்டியக் கச்சேரிகள் நடைபெறுவதோடு இவரின் இசைக்கச்சேரியும் நடைபெற்று வந்தது இவரின் தந்தையாரின் முயற்ச்சியாலும், மற்றும் பல வித்துவான்களின் கூட்டுறவாலும், ஞானத்தாலும் இவர் உயர்வு அடைந்து வந்தார். நாட்டியக் கலைக்குவேண்டிய கிரகங்களை நன்கு கற்று பாரத, சங்கீத சாஸ்திரங்களிலும் அதிக பயிற்சி பெற்றுக்கொண்டார்.இவரது தந்தையாரிடம் நாட்டியம், சங்கீதம், மிருதங்கம் கற்க வந்த மாணவ, மாணவிகளுக்கு தாமே பாடங்களைப் போதித்து வந்தார். இவருக்கு ராமநாதபுர சமஸ்தானம், திருவனந்தபுரம்,புதுக்கோட்டை சமஸ்தானங்களிலும் ஆதரவு நாளுக்கு நாள் ஓங்கி வளர்ந்தது. பல சங்கீத வித்துவான்களும் வயலின் வித்துவான்களும் இவரிடம் வந்து சந்தேகங்களையும், விஷயங்களையும் கேட்டுத் தெரிந்து கொண்டார்கள். இசைத் தொண்டு ஆற்றிவரும் பரம்பரை ஆதலால் பிள்ளை அவர்களும் அத்தொண்டு செய்து வந்தார்.
சித்திரைத் திருவிழா அன்று நடைபெறும் குறவஞ்சி நாடகத்தைப் புது முறையில் சிறப்பாக நடாத்திக் காட்டினார். தந்தைக்கு முன் மாணவ, மாணவிகளுக்குத் தாமே சங்கீதம், நாட்டியம், மிருதங்கம் சொல்லிக் கொடுத்தார். இப்பொழுது பரதநாட்டிய ஆசிரியர்களாக விளங்குபவர்களில் பலர் இவரது மாணவர்களே. அண்ணாமலை இசைக்கல்லூரிக்கு இவரே ஆரம்பத்தில் ஆசிரியராக நியமிக்கப்பட்டார். அநேக மாணவர்களுக்கு இசை இன்பத்தை ஊட்டி சிறந்த வித்துவான்களாக ஆக்கினார். மிருதங்க வகுப்பைத் தாமே நடத்தினார். அச்சமயத்தில் இவர் ஜதீஸ்வரம், தாளவர்ணம், தமிழில் தில்லானாக்கள் கீர்த்தனங்கள் இயற்றித் தம் முன்னோரின் ஸ்வரஜதிகள், தாளவர்ணங்கள், கீர்த்தனங்கள் நாடெங்கிலும் பரவும்படி கற்பித்துவந்தார். சென்னை சர்வகலாசாலையில் முக்கிய அங்கத்தவராக இருந்து வந்தார். தமது விடுமுறையின் போது யாழ்ப்பாணம் சங்கீதப் பரீட்சைகள் நடாத்திப் பலருக்கு மதிப்பும் பத்திரமும் கொடுத்துள்ளார். அண்ணாமலைப் பல்கலைக்கலகத்திற்கு வேண்டிய புத்தகங்களையும் எழுதியுள்ளார். இசை இலக்கணப் புத்தகம் ஒன்றும் எழுதிக் கற்பித்தார்.
1932ல் சென்னை வித்துவசபையினரால் இவருக்கு சங்கீத கலாநிதிப் பட்டமும் கொடுக்கப்பட்டது. சென்னை சர்வகலாசாலையில் ஆசிரியர் குழுவுக்கு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் சென்னை சர்வகலாசாலையில் வேலை செய்யும் போது தம் முன்னோர்களின் சாகித்தியங்களை தொகுத்து ஸ்வர தாளக் குறிப்புடன் விபரமாக 'தஞ்சைப் பெருவுடையான் பேரிசை' என்ற புத்தகத்தை வெளியிட்டார். அகில இந்திய கவி மாநாட்டுக்கு இசைப்பகுதி அங்கத்தவராகச் சென்று அம்மாநாட்டை நடத்தினார்.
அண்ணாமலை இசைக்கல்லூரியில் பாடங்கள் முழுவதையும் தமிழில் இசைப்பாடல்கலாகவே நடாத்த வேண்டுமென்று இராஜ சேர் அண்ணாமலைச் செட்டியார் அவர்களின் விருப்பத்துக்கு இணங்க ஆரம்ப பாடல்களுக்கு வேண்டிய தமிழ்ப் பாடல்களை செய்துகொடுத்தார். இவர் சென்னை, திருச்சி அகில இந்திய ரேடியோ நிலையங்களில் கச்சேரி செய்து இசை ஆராய்ச்சி உரையும் நிகழ்த்தினார்.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ் இசைக் குழுவுக்கு முக்கிய அங்கத்தவராகவும் பரீட்சாதிகாரியாகவும் சென்னை அடையாற்றில் நடனப் பள்ளிக்கூடத்த்திற்குப் பரீட்சாதிகாரியாகவும் இருந்தார். இவர் இயற்றிய பாடல்களில் அஞ்சனா கீதம், இலட்சண கீதம், பிரபந்தம், கீர்த்தனம், தில்லானா, இராகமாலிகை, பதவர்ணம் முதலியவற்றில் இவரின் சங்கீத புலைமை புலனாகிறது. இவர் தமது கடைசிக் காலத்தில் அண்ணாமலை இசைக் கல்லூரிக்கு வேண்டிய பாடல்களை செய்து கொடுத்து இறுதியாக உடல்நலக் குறைவால் தமது 57 வது வயதில் 1945 ஆம் ஆண்டு ஆனி மாதம் 30 ஆம் திகதி தஞ்சைப் பெருவுடையான் திருவடியை அடைந்தார்.